ஜெயலலிதா நடத்திய அதே திருச்சி மைதானத்தில்.. ஓபிஎஸ் தலைமையில் இன்று மாநாடு.. திருப்புமுனையாகுமா?

திருச்சி: திருச்சியில் இன்று மாலை நடக்கும் மாநாடானது ஓ.பன்னீர் செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க போகிறோம் என்ற ஆரவாரத்துடன் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ அவர்களுக்கு எந்த ஆதரவு கிடைத்தால் என்ன கிடைக்காட்டி என்ன? அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்கள் கட்சியை உயிருப்புடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பார். இதில் மாற்றுக் கருத்து என்பதே இல்லை என்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக இரண்டாக பிரிந்து பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்தன. இதையடுத்து ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச் செயலாளர் என கூறிய சசிகலா வசம் இருந்த பொதுச் செயலாளர் பதவியை நீக்கினர்.

இரட்டை அதிகாரம்: அதற்கு பதிலாக இணையான அதிகாரங்களை கொண்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது. சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராக ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து பயணம் செய்தனர். நாளடைவில இரட்டை தலைமையால் தேர்தலில் சீட் பங்கீடு செய்வது, கட்சி பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக இருவருக்குள் மோதல் வெடித்தது.

மாவட்டச் செயலாளர் ஆதரவு: இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இருந்தனர். இதனால் கட்சியில் தங்கள் ஆதரவாளர்களை நியமனம் செய்ததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல் நேரங்களளில் வேட்பாளர்கள் தேர்வில் எடப்பாடி பழனிசாமியே அனைத்து முடிவுகளையும் எடுத்தார்.

ஓபிஎஸ் ஆவேசம்: இதனால் ஆவேசமான ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்கும் பதவிகளை வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளரான முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்க கேட்டார். ஆனால் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் சேர்ந்து ராஜ் சத்தியனை வேட்பாளராக நிறுத்த எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராஜ் சத்யன் தேர்வு: அதன்படி எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்துவிட்டு ராஜ் சத்யனை மதுரை எம்பி தேர்தல் வேட்பாளராக அறிவித்தார். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ராஜ் சத்யனுக்கு எதிராக வேலை பார்த்ததாக சொல்லப்பட்டது. அவரும் தோல்வி அடைந்தார். அது போல் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் தமிழகத்தின் ஒரே அதிமுக வேட்பாளராக வென்றார். இந்த தொகுதியில் பணியாற்றியவர் ஆர்.பி.உதயகுமார்.

ஓபிஎஸ் உள்ளடி வேலை பார்த்தாரா: இதையடுத்து ஓபிஎஸ், மக்களவைத் தேர்தலிலும் சட்டசபைத் தேர்தலிலும் பெரியளவுக்கு தமிழகம் முழுவதும் சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை. சொந்த கட்சிக்காரர்கள் தோற்க உள்ளடி வேலைகளை ஓபிஎஸ் தரப்பு பார்த்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டினர். இதனாலேயே முதல்வர் வேட்பாளராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் எடப்பாடி பழனிசாமியே தேர்வு செய்யப்பட்டார்.

O Panneer Selvam is conducting conference today at Trichy G Corner ground

ஒற்றைத் தலைமை: இதன் பிறகு ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை எழுந்தது. பொதுக் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து பொதுக் குழு உறுப்பினர்கள் நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமியே அப்பதவிக்கு போட்டியின்றி வென்றார்.

பொதுச் செயலாளர்: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது. அதை ஏற்க மறுத்து ஓபிஎஸ் தரப்பினர் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஓபிஎஸ் தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக திருச்சியில் இன்று மாலை மிகப் பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

திருப்புமுனை கிடைக்குமா: திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடக்கும் ஜி கார்னர் மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் மாநாடு நடத்தியுள்ளார். திருச்சி தமிழகத்தின் மையமாக இருக்கிறது. இதனால் எந்த முக்கிய நகரங்களாக இருந்தாலும் அங்கிருந்து 4 மணி நேரத்தில் திருச்சி வரலாம் என்பதால் ஓபிஎஸ் திருச்சியை தேர்வு செய்திருக்கிறார் என்கிறார்கள். மேலும் திருச்சி மாநாடு திருப்பு முனை மாநாடாக அமையும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். இந்த மாநாட்டில் 5 ஆயிரம் பேர் திருச்சி வருகிறார்கள்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.