புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தடுத்து நிறுத்தம்

புதுடெல்லி: பாஜக எம்.பி. மீதான பாலியல் புகாரில் அவர் மீது நடவடிக்கை கோரி புதிய நாடாளுமன்றக் கட்டிடம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ளவர் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர், இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதை கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டம் தொடங்கினர்.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னர், பிரிஜ் பூஷண் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அவர்களை டெல்லி போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி அவர்கள் செல்ல முயன்றதால், போலீஸாருக்கும், வீரர், வீராங்கனைகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அவர்களை பேருந்தில் ஏற்றி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.

இதுகுறித்து டெல்லி சிறப்பு காவல் ஆணையர் (சட்டம் – ஒழுங்கு) தீபேந்திர பதக் கூறும்போது, “சட்டம் – ஒழுங்கை மீறியதற்காக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.