பெங்களூருவில் மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை

பெங்களூரு:

தனியாக வசித்த மூதாட்டி

பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் கமலம்மா (வயது 82). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் பெயர் குருபிரசாத் ஆகும். அவர் ஒயிட்பீல்டு பகுதியில் வசித்து வருகிறார். அதுபோல், கமலம்மாவின் 2 மகள்களும் வேறு பகுதியில் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக கமலம்மா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் கமலம்மாவின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அவரது கை, கால்களை கட்டினார்கள். பின்னர் கமலம்மா சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அமுக்கினர். அதன்பிறகு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள், வீட்டில் இருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டார்கள்.

மூச்சுத்திணறி சாவு

இதற்கிடையில் கை, கால்களை கட்டியதுடன், வாயில் துணியை வைத்து அமுக்கி இருந்ததால் மூச்சு திணறி கமலம்மா இறந்து விட்டார். இதனால் நேற்று முன்தினம் இரவு வரை அவரது வீட்டில் மின்விளக்கு ஒளிராமல் இருளாக காட்சி அளித்தது. உடனே இரவு 9 மணியளவில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கமலம்மா வீட்டுக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்கள். கமலம்மா கொலை செய்யப்பட்டு கிடந்ததுடன், நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மகாலட்சுமி லே-அவுட் போலீசார் விரைந்து வந்து கமலம்மாவின் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள். அப்போது கமலம்மா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்மநபர்கள், அவரது கை, கால்களை கட்டியும், மூச்சு திணறடித்தும் கொன்றுவிட்டு, 60 கிராம் நகைகள், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

5 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்து வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சிவபிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கமலம்மா கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கமலம்மாவுக்கு தெரிந்த நபர்களே இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலையாளிகள் பற்றிய முக்கிய துப்பு கிடைத்துள்ளது. கூடிய விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள், என்றார்.

இதற்கிடையில், கொலையாளிகளை பிடிக்க கமலம்மா வீட்டை சுற்றி இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி தனிப்படை போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். கமலம்மாவின் மகன், மகள்களிடம் விசாரித்து போலீசார் தகவல்களை பெற்றுள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.