சென்னை: நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட். திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில், கலக்கி தமிழ்நாட்டு இல்லங்கள் தோறும் இடம்பிடித்தார் வெங்கடேசன் (எ) போஸ் வெங்கட்.
தொடர்ந்து, பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது வரை சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குநரும் கூட. கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த கன்னிமாடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.
கன்னிமாடம் படத்தைத் தொடர்ந்து போஸ் வெங்கட், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் அனுபவித்த நெருக்கடிகளை மையமாக வைத்தும், ஒரு தலைவனாக ஸ்டாலின் உருவாக காரணமாக இருந்த நிகழ்வுகளையும் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
போஸ் வெங்கட், திமுக தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டங்களிலும் போஸ் வெங்கட் உரையாற்றியிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட போஸ் வெங்கட் விருப்ப மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோக சம்பவங்கள் அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி இன்று உயிரிழந்தார். இதனால் போஸ் வெங்கட்டின் குடும்பத்தினர் பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். வளர்மதி இறந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, அவரது இறுதிச் சடங்கிற்கு சென்றிருந்த அவரது சகோதரர் ரங்கநாதன், சகோதரி உடலைப் பார்த்துக் கதறி அழுதுள்ளார். அப்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் ரங்கநாதனும் இறந்துவிட்டார்.
அடுத்தடுத்து குடும்பத்தில் இரண்டு இறப்பு நிகழ்ந்ததால் போஸ் வெங்கட்டின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் செய்தி போஸ் வெங்கட்டின் ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது அக்காவையும், அண்ணனையும் இழந்து தவிக்கும் போஸ் வெங்கட்டுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.