மைசூரு : ”இந்தாண்டு தசரா திருவிழாவை, இசையமைப்பாளர் அம்சலேகா திறந்து வைப்பார்’ என முதல்வர் சித்தராமையா அறிவித்ததற்கு, அம்சலேகா நன்றி தெரிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவுக்கு, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். கடந்தாண்டு பா.ஜ., ஆட்சி காலத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, தசராவை துவக்கி வைத்தார்.
இந்தாண்டு, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக மைசூரு வந்த முதல்வர் சித்தராமையா, நேற்று சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்த பின், ”நடப்பாண்டு தசரா விழாவை, பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா துவக்கி வைப்பார்,” என்றார்.
இது தொடர்பாக, ஹம்சலேகா கூறியதாவது:
முதல்வரின் அறிவிப்பு, எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. முதலில் அனைத்து கலைஞர்கள் சார்பில் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கடந்தாண்டு என் உடல்நிலை மோசம் அடைந்தபோது, சித்தராமையாவும், சிவகுமாரும் நான் நலம் பெற, ‘டுவிட்’ செய்தனர். தசரா ஒரு பெரிய கொண்டாட்டம். இத்தகைய கொண்டாட்டத்தை துவக்கி வைக்க, என்னை போன்ற போராளியை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.
நம் நாட்டில் தொழிற்சங்க அமைப்பு வருவதற்கு முன், அரசியலமைப்பு தயாராவதற்கு முன், அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்க வேண்டும் என்று சிந்திக்கும் முன், அதையெல்லாம் இங்கு நால்வடி கிருஷ்ணராஜ உடையார் செயல்படுத்தினார்.
மக்கள் பிரதிநிதிகள் பேரவையை நடைமுறைபடுத்தி இருந்தார். இது இந்தியாவுக்கு வெளிச்சமாக மாறியது. என் மனதில் ‘பிறந்தால் கன்னட நாட்டில் பிறக்க வேண்டும்’ என்ற பாடல்கள் ஒலிக்கின்றன. இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு சுதந்திரம் அளித்துள்ளது. சுதந்திரம் ஒரு இனிமையான காற்று. அந்த சுதந்திரத்தை வைத்து கொண்டு அரசியலமைப்பை கேள்வி கேட்கலாம். கன்னடத்தை நாம் இழக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தி வெளியானதும், சமூக வலைதளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் குறித்து, ஹம்சலேகா கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின், காங்கிரஸ் சார்பில் பா.ஜ., அரசுக்கு எதிரான கண்டன பேரணியில் ஹம்சலேகா பங்கேற்றார். எனவே, இம்முறை தசரா விழாவுக்கு அவரை தேர்வு செய்து, காங்கிரஸ் அரசு, நன்றி கடனை அடைத்துவிட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
யார் இந்த அம்சலேகா?
கடந்த 1951ல் கோவிந்தராஜ் – ராஜம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் கங்கராஜு. இசை மீது பிரியமான இவர், 1980ல் கன்னட திரைப்படத்தில் இசையமைத்தார். அப்போது அவர், தன் பெயரை ஹம்சலேகா என மாற்றிக் கொண்டார். ஆனால் படம் வெளியாகவில்லை.
பின், 1985ல் நானு நன்ன ஹெந்தித்தி என்ற படத்தின் மூலம் பலருக்கும் தெரியவந்தார். அன்று முதல் அவர் மிகவும், ‘பிசி’யான இசையமைப்பாளரானார். 1995ல் ‘சங்கீதா சாகர ஞானயோகி பஞ்சாக்சர கவாய்’ என்ற திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருதை பெற்றார்.
கன்னடம் மட்டுமின்றி, தமிழில், கேப்டன் மகள், நாட்டுக்கு ஒரு நல்லவன், கொடி பறக்குது உட்பட, தெலுங்கிலும் இசையமைத்துள்ளார். ஆறு பிலிம் பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.
இசை மட்டுமின்றி, கதை, திரைக்கதை, வசனகர்த்தா என இவருக்கு பல முகங்கள் உண்டு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்