‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம்: டெல்லியில் முதல் ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை டெல்லியில் நேற்று நடைபெற்றது.

மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2-ம் தேதி உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் அதிக எம்.பி.க்களைக் கொண்ட எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உயர்நிலைக் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பார். மத்திய சட்டத் துறைச் செயலர் நிதின் சந்திரா, குழுவின் செயலராகப் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில், இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குழுவில் உறுப்பினராக இடம்பெற மறுத்துவிட்டார்.

இந்த சூழலில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆதிர் ரஞ்சனைத் தவிர்த்து, மற்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும். மக்களவை, சட்டப்பேரவைகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அரசுகள் கவிழ்ந்தால் எவ்வாறு செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், மத்திய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.