சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு முன்பு, அனுமதி பெறாமல் பா.ஜ.க கொடிக்கம்பம் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாக, அங்கு சென்ற காவல்துறையினர், நீண்ட இழுபறிக்குப் பிறகு, இரவு நேரத்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கொடிக்கம்பத்தை அகற்றியிருக்கின்றனர். கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டு, அருகிலிருந்த மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்தவர்கள்மீது அரசு ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அங்கிருந்த எல்லோரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், அமர் பிரசாத் ரெட்டி கைதாகாமல் அண்ணாமலையின் வீட்டுக்குள் சென்றுவிட்டார். ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் அமர்பிரசாத் ரெட்டியும் இருந்ததால், வீட்டுக்குள் சென்று அவரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதாவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர், “எங்கள் கொடியைத் தொட்டால் தமிழ்நாட்டில் உங்கள் கொடி பறக்காது என்று தமிழக முதல்வரை எச்சரிக்கிறேன்” என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் அமர் பிரசாத் ரெட்டி கைதுசெய்யப்பட்டது, பா.ஜ.க-வினருக்கு சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் சனி, ஞாயிறு, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை வருவதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதால், பா.ஜ.க-வினரால் உடனடியாக ஜாமீன் மனுகூட தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அமர் பிரசாத் ரெட்டியைப் பொறுத்தவரை அரசுக்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பலமுறை உதிர்த்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவை ஒட்டி இரங்கல் தெரிவிக்க நேரில் சென்ற அண்ணாமலையுடன் அமர் பிரசாத் ரெட்டியும் சென்றிருந்தார். அங்கு காவல்துறை, பத்திரிகையாளர்களுடன் அமர் பிரசாத் ரெட்டி கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டு, ஒருமையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரின்போது கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் விளம்பரம்மீது மோடி படத்தை ஒட்டினார். நுங்கம்பாக்கத்திலும் ஒருமுறை காவல்துறையினரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முதல்வர், அமைச்சர்கள் என பலரையும், மறைந்த தலைவர்கள் சிலரையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். எனவே அவர்மீது நிலுவையில் இருக்கும் புகார்கள், குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக காவல்துறை தூசிதட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமர் பிரசாத் ரெட்டி இன்று (26.10.2023) மேலும் 2 வழக்குகளில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அமர் பிரசாத் ரெட்டி வழக்கு விவகாரத்தில் காவல்துறை அடுத்தடுத்து அதிரடி காட்டுவருவது குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம். “அரசியல்ரீதியாக எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது என்ற எல்லைகளை மீறி, பல இடங்களில் அமர் பிரசாத் ரெட்டி பேசியிருப்பதால், அரசாங்கம் அவர்மீது கடும் கோபத்தில் இருக்கிறது. சமூக வலைதளங்களிலும் அநாகரிகமாக பதிவுகளை பலமுறை இட்டிருக்கிறார். அதிகாரிகளை மிக மோசமாக நடத்தியிருக்கிறார். அதனால் எல்லா வழக்குகளையும் தூசிதட்டி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த சில மாதங்களுக்கு அவர் சிறையில்தான் இருக்க வேண்டியிருக்கும்” என்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்புவரை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஆருத்ரா வழக்கிலும் அமர் பிரசாத் ரெட்டியின் பெயர் அடிபட்டது. அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஹரீஷ், கடைசியாக செல்போனில் பேசியது அமர் பிரசாத் ரெட்டியிடம்தான் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு ஹரீஷ் கைதுசெய்யப்பட்டு அவரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அதேபோல கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளை ஒட்டி ‘மோடி கபடி லீக்’ பா.ஜ.க-வின் இளைஞர் விளையாட்டுப் பிரிவு சார்பாக நடத்தப்பட்டது. அதில் பணமோசடி நடந்ததாக பா.ஜ.க ஆதரவாளர் மீஞ்சூர் சலீம் ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்வாறு அமர் பிரசாத் ரெட்டி மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், அதில் அவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்தும் விசாரணையை முடுக்கிவிட காவல்துறை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் அண்ணாமலையின் வலதுகரம்போல வலம் வரும் அமர் பிரசாத் ரெட்டியை, விரைவாக பிணையில் எடுத்துவிட வேண்டுமென்று பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவும் தீவிரம் காட்டி வருகிறது.