Vikram:`விக்ரம் நாயகனாகி 33 ஆண்டுகள்'- குரலால் உடலால் மனதால் நடிப்புக்கு தன்னை ஒப்புக்கொடுத்த பயணம்

‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆன விக்ரம் தன் நாயகப் பயணத்தில் 33-வது ஆண்டை நிறைவு செய்கிறார்.

தமிழ் சினிமாவில் ஃபெர்பார்மர், என்டர்டெயினர் என நடிகர்களை இரு வகைகளாகப் பிரிக்கும்போது எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் வரிசையில் விக்ரமுக்குப் போட்டி யார் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாது. ஆனால், அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால் மற்ற நடிகர்களோடு பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்கு விக்ரம் தனி ஒருவனாக நடிப்பில் வலம் வருவதை அறிந்துகொள்ளலாம்.

ஏழெட்டு வயதில் நாடகத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார் சிவாஜி. ஐந்து வயதில் திரையுலகில் அறிமுகமானார் கமல். ஆனால், ரொம்பத் தாமதமாக சுமார் 24 வயதில் சினிமாவில் நடிக்க வந்தாலும் விக்ரமை அவர்கள் வரிசையில் வைத்து அழகு பார்க்கிறார்கள் ரசிகர்கள். காரணம், அர்ப்பணிப்பு மிகுந்த ஆகச் சிறந்த கலைஞனாக விக்ரம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால்தான்.

விக்ரம்

இத்தனைக்கும் பராசக்தி சிவாஜியைப் போல விக்ரம் அறிமுகப் படலத்திலேயே அசரவைக்கவில்லை. கமலைப் போல் சினிமாவின் மீதான தீராக் காதலை வெளிப்படுத்தும் வாய்ப்பை அவரது ஆரம்பகாலப் படங்கள் வழங்கவில்லை. தொட்டதெல்லாம் ஹிட் ஆகவில்லை. தடைகளையும், சறுக்கல்களையும், தோல்விகளையும் சந்தித்துக்கொண்டே வருகிறார். ஆனால், அவற்றிலிருந்து பாடம் கற்றுத் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார். அந்தக் கற்றலும், பயிற்சியும், நடிப்பின் மீதான தீராக் காதலும்தான் விக்ரமை மிகப்பெரிய நடிகனாகத் தகுதிப்படுத்தியது.

தந்தை போட்ட தடை

விக்ரமின் தந்தை வினோத்ராஜ் சினிமா ஆசையில் பரமக்குடியிலிருந்து சென்னைக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி நாயகன் ஆசை கடைசி வரை நிறைவேறவே இல்லை. கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்கத் தொடங்கி, குணச்சித்திர நடிகர் ஆவதற்கே படாதபாடு பட்டார். இந்தச் சூழலில் அப்பா அடைய முடியாத லட்சியத்தைத் தான் அடைய வேண்டும் என்கிற ஆர்வத்தில் தன் சினிமா கனவைத் தந்தையிடம் சொன்னார் விக்ரம்.

வினோத்ராஜ் ஒரேயடியாக மறுத்தார். எதுவாக இருந்தாலும் கல்லூரிப் படிப்பு முடித்த பிறகுதான் என்று கண்டிஷன் போட்டார். அப்பாவே நம் ஆர்வத்துக்கு அணை போட்டுவிட்டாரே என்று நினைத்த விக்ரம், வேண்டா வெறுப்பாய் லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். அதன்பிறகு அப்பாவிடம் ஒருவழியாக சம்மதம் வாங்கி தன் 24-வது வயதில் ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் நாயகன் ஆனார்.

விக்ரம்

காலம் கொடுத்த காயங்கள்

பொதுவாக சினிமாவில் மிகப் பெரிய திருப்புமுனையோ, ஒரு நடிகன் மீது கவன ஈர்ப்பு குவிவதோ எப்போது நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. விக்ரமுக்கு அந்த கவனம் கிடைக்க ஒன்பது வருடங்கள் ஆயின. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி என்று அனைவருக்கும் ஹிட் படங்களைக் கொடுத்த, 25 ஆண்டுகள் திரைத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த ஸ்ரீதர் இயக்கத்தில் ‘தந்துவிட்டேன் என்னை’ படத்தில் விக்ரம் நடித்தார். அடுத்து ரஜினி, கமலுக்கு வரிசையாக வசூல் குவிக்கும் படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ‘காவல் கீதம்’, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் ‘மீரா’ எனப் பார்த்துப் பார்த்து, கதைகளைத் தேர்வு செய்து நடித்தார். அத்தனை படங்களும் விக்ரமுக்கு ஏமாற்றங்களையும், காயங்களையுமே பரிசாக வழங்கின.

அவருக்கான அடையாளமும், வரவேற்பும் கிடைக்கவில்லை. அதற்காக அவர் முடங்கிவிடவில்லை. விடாமுயற்சியோடு தொடர்ந்து கிடைக்கிற கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்தார். மலையாளம், தெலுங்கு என்று பிற மொழிப் படங்களில் மாறி மாறி நடித்தார்.

முதலில் நிராகரிக்கப்படுகிற மனிதர்கள்தான் தங்கள் திறமையால் உலகில் முன்னிறுத்தப்படுகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே துவண்டுவிடாமல் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி தன்னைப் பட்டை தீட்டிக்கொண்டே இருந்தார்.

பாலா தந்த பரிசு

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. ரஜினி, கமலுக்கு கே.பாலசந்தர் கிடைத்ததைப் போல் விக்ரமுக்கு பாலா கிடைத்தார். 1999ஆம் ஆண்டு வெளியான சேது படம், பாலா – விக்ரம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. 34 வயது இளைஞரான விக்ரம், திரையில் 20 வயது இளைஞனின் குணநலன்களை அப்படியே பிரதியெடுத்தார். காதலின் ஆழத்தையும், முரட்டு குணாம்சம்த்தின் தீவிரத்தையும் ஒருசேர வெளிப்படுத்தி ரசிகர்களை நிமிர்ந்து பார்க்கச் செய்தார்.

சேது படம்

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனின் வலியை, பிரச்சினையை, சோகத்தை, காதலின் தவிப்பை அப்படியே பார்வையாளர்களுக்குக் கடத்தினார். விக்ரம் எனும் கலைஞனைத் தமிழ் சினிமா கண்டுகொண்ட தருணம் அதுதான். ஆனால், அதற்குப் பிறகும் இரு வருடங்கள் ஊசலாட்டம்தான். தோல்விக்கு இடம் கொடுக்காத யாரும் புதுமைகளைப் படைத்துவிட முடியாது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து பாதையை மாற்றிக்கொண்டார் விக்ரம்.

குரல் வழி நடிப்பில் கவன ஈர்ப்பு

இந்த இடைப்பட்ட காலங்களில் விக்ரம் தன்னைத் தயார்படுத்திக் கொண்ட விதமே அலாதியானதுதான். நடிச்சா ஹீரோதான் என்று அடம் பிடிக்காத விக்ரம், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அஜித், அப்பாஸ், வினீத், பிரபுதேவா என்று தனக்குப் பின்பு சினிமாவில் அறிமுகமான இளையவர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தார். அதையும் நடிப்புக்கான பாதையாகத்தான் பயன்படுத்திக் கொண்டார். ஏனெனில், ஒரு கலைஞனுக்கு மொழி, உடல், குரல் மூன்றும் கைவரப் பெறவேண்டும். அந்த வகையில் குரல்வழி நடிப்பின் மூலம் அழுத்தமான தடம் பதித்தார் விக்ரம். இன்றும் ‘அமராவதி’, ‘பாசமலர்கள்’, ‘புதிய முகம்’, ‘காதலன்’, ராசய்யா’, ‘மின்சாரக் கனவு’, ‘காதல் தேசம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களில் விக்ரமின் குரலைக் கேட்க முடியும். அது அந்த நடிகர்களின் நடிப்புக்கு எந்த அளவுக்கு ஒத்திசைவு தந்துள்ளது என்பதை உணரமுடியும்.

Vikram

கமலைப் போல் இரண்டும் கலந்த கலவை

ஒரு கதாபாத்திரத்துக்குள் தன்னுடைய வடிவத்தை எடுப்பவர்கள் ஃபெர்பார்மராகவும், ஒரு கதாபாத்திரத்துக்குள் தன்னுடைய வடிவத்தைத் தொலைப்பவர்கள் ஆர்டிஸ்ட்டாகவும் ஜொலிக்கிறார்கள். அந்த இரண்டையும் இணைந்து செய்பவர்களே மிகச்சிறந்த நடிகர்கள். அப்படி ஒரு நடிப்புக் கலையைத் தனதாக்கிக் கொண்டுள்ளார் விக்ரம். அதனால்தான் கமலைப் போலவே அவர் இரண்டும் கலந்த கலவையாக ‘தில், ‘ஜெமினி, ‘தூள், ‘சாமி, ‘அருள்’, ‘பீமா’, ‘அந்நியன்’, ‘கந்தசாமி’, ‘தாண்டவம்’, ‘கோப்ரா’ என்று கமர்ஷியல் படங்களிலும், ‘காசி’, ‘பிதாமகன்’, ‘ராவணன்’, ‘தெய்வத் திருமகள்’, ‘ஐ’, ‘பொன்னியின் செல்வன்’ என்று பரிசோதனை முயற்சிப் படங்களிலும் சம அளவில் நடிக்க முடிந்தது.

`ராவணன்’ படத்தில் விக்ரம்

யார் சிறந்த நடிகன் என்பதற்கு விக்ரமின் வாழ்க்கைப் பாதையே சாட்சி. நாம் முன்பின் வாழ்ந்திராத ஒரு வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதனைப் பார்வையாளனுக்குக் கடத்த வேண்டும். அப்படியான நடிப்பைத் திரையில் வெளிப்படுத்த வேண்டும். இது மெத்தட் ஆக்டிங்கின் முக்கியமான விதி. ரஷ்ய நாடக இயக்குநரான ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கிய நடிப்பு முறைதான் மெத்தட் ஆக்டிங். ஒரு நடிகர் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் அளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் மாற வேண்டியது இன்றியமையாதது. அப்படி மாறும்போதுதான் நடிப்பு முழு பரிமாணம் பெற்று, கதாபாத்திரத்தின் தன்மை மிகத் துல்லியமாக வெளிப்படும். அதனைத் தன் பரிசோதனை முயற்சிப் படங்களில் பரீட்சித்துப் பார்த்து வெற்றி கண்டவர் விக்ரம்.

உடலை வருத்தி தனித்துவம்

உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரம் தனித்துவம்தான். பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க கண்களில் லென்ஸ் பொருத்திக்கொண்டால் போதும் என்று இயக்குநர் வினயன் கூற, யதார்த்த நடிப்புதான் என்றும் பேசும் என அன்பாக மறுத்து, கருவிழியை மறைக்கும்படி ரிஸ்க் எடுத்து ‘காசி’ படத்தில் நடித்தார் விக்ரம். கண் வலி, தலை வலி எனப் படப்பிடிப்பு முடிந்த பிறகு அவஸ்தைப்பட்டாலும் இப்போதும் விக்ரமின் நடிப்பைப் பார்த்து சிலாகிக்கிறோம்.

`காசி’ படத்தில் விக்ரம்

‘பிதாமகன்’ படத்தில் பிணங்களை எரியும் சித்தனாகவே ஓடி, ஆடி, கறை படிந்த பற்களுடன் சிரித்து, பயமுறுத்தி, வில்லனை வெறிகொண்டு தாக்கியதை இமை கொட்டாமல் பார்த்து அசந்து போனார்கள் ரசிகர்கள். அந்த நடிப்புக்கான அங்கீகாரமாகத்தான் விக்ரமுக்கு தேசிய விருது தேடி வந்தது. ‘தெய்வத்’ திருமகள் படத்தில் 5 வயதுக் குழந்தைக்கே உரிய மனநிலையை, பண்புகளைத் தன் உடல் மொழியில் வெளிப்படுத்தியதெல்லாம் வேற லெவல் நடிப்பு.

‘ஐ’ படத்தில்

‘அந்நியன்’ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் , விக்ரமை கொடூரமாகச் சித்திரவதை செய்யும் காட்சிகளில் அம்பி அந்நியனாக மாறுவது முக்கியமான காட்சி. அப்பாவியான மனிதர், காதல் மன்னன் ரெமோ, தவறுகளைக் கண்டு பொங்கும் அந்நியன் என்று நடிப்பில், தோற்றத்தில் மூன்று வித வெரைட்டி காட்டிய விக்ரம் ‘ஐ’ படத்தில் பாடி பில்டர், மாடல், அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நபர் என்று உடலைச் சிதைத்து விக்ரம் நடித்த விதம் அர்ப்பணிப்பின் உச்சம்.

பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாய் காதலிலும், வீரத்திலும் சிறந்த அரசனை அப்படியே கண்முன் நிறுத்தினார்.

தீராக் காதல்

ஒரு நடிகன் இரண்டு நிலைகளில் தன் நடிப்புத் திறமையை இந்த உலகுக்குப் பரிபூரணமாக வெளிப்படுத்த நினைக்கிறான். அது நடிப்பு என்பதை மறக்கடிக்கும் அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறுவது. உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவது. இந்த இரண்டு நிலை நடிப்பையும் விக்ரம் அசாதாரணமாகக் கடந்து வந்திருக்கிறார். அதற்குக் காரணம் சினிமா மீது விக்ரமுக்கு இருக்கும் தீராக் காதல். அதனால்தான் தன் ஒவ்வொரு படத்திலும் சலிப்படையச் செய்யாமல் ரசிகர்களுக்குத் தீனி போடும் அளவுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்க மெனக்கெடலில் ஈடுபடுகிறார்.

Thangalaan | தங்கலான்

தமிழ் சினிமாவின் தரத்தை நடிப்பால் உயர்த்த முடியும் என்பதற்கான நிகழ்கால உதாரணமாக இருக்கிறார். அந்த அரியவகை பண்பால்தான் பாலா, ஷங்கர், மணிரத்னம், தரணி, சரண், சுசி கணேசன், ஹரி, லிங்குசாமி, விஜய், கார்த்திக் சுப்புராஜ், அஜய் ஞானமுத்து, பா.இரஞ்சித் என்று வெரைட்டியான இயக்குநர்களின் படங்களில் விக்ரமால் நடிக்க முடிகிறது.

துருவ் விக்ரம் – விக்ரம்

பெருமைமிகு தருணம்

மிகச் சிறந்த நாயகனாக சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதே விக்ரம் அப்பா வினோத்ராஜின் ஆசை. கடைசிவரை ஒரு துணை நடிகராகவே விக்ரம் அப்பாவால் சினிமாவில் வலம்வர முடிந்தது. அப்பா கனவு கண்டதை விக்ரம் நனவாக்கினார். அடுத்து தன் மகன் துருவ் விக்ரமையும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தினார். ‘மகான்’ படத்தில் மகனுடன் இணைந்து நடித்தார். ஒரு தந்தையாகவும், அர்ப்பணிப்புள்ள கலைஞராகவும் விக்ரம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது. விக்ரம் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்குச் சொன்ன செய்தி இதுதான். முயற்சி திருவினையாக்கும்…

– உதிரன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.