செதுக்கங்கள் ஊடாகப் பாராளுமன்றத்தை வடிவமைத்த பிரபல கலைஞர் விமல் விக்ரமசுரேந்திர மறைந்தார்

இலங்கைப் பாராளுமன்றத்தின் சபா மண்டபத்துக்கு நுழையும் பிரதான கதவாகக் காணப்படும் வெள்ளிக்கதவு உள்ளிட்ட பாராளுமன்றத்தின் சபா மண்டபத்தில் காணப்படும் பல்வேறு சிற்பங்களைச் செதுக்கிய பிரபல சிற்பக் கலைஞர் விமல் விக்ரமசுரேந்திர அண்மையில் காலமானார்.

அவர் தனது 87வது வயதில் இயற்கை எய்தினார்.

12 அடி நீளம் 12 அடி அகலம் கொண்ட பாராளுமன்ற சபா மண்டபத்துக்கு நுழையும் பிரதான வெள்ளிக் கதவில் பண்டைய கல்வெட்டுக்களின் பாணியைப் பின்பற்றி அரசியலமைப்பின் முன்னுரையின் செதுக்கம் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் சபா மண்டபத்தில் காணப்படும் பல்வேறு சிற்பங்களை உருவாக்கிய பெருமை சிற்பக் கலைஞர் விமல் விக்ரமசுரேந்திரவைச் சாரும். பாராளுமன்றத்தை வடிவமைத்த ஜெஃப்ரி பாவா அவர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த செதுக்கங்களுக்கான ஒத்துழைப்பை அவர் வழங்கியிருந்தார்.

அத்துடன், இந்நாட்டில் உள்ள பல்வேறு மாகாண சபைகளுக்கான செங்கோல்களையும் இவர் உருவாக்கியிருப்பதுடன், கொழும்பு கோட்டை இலங்கை வங்கி தலைமையகத்தில் உள்ள இலங்கை நாணயங்களின் வரலாற்றை சித்தரிக்கும் உலோக நாணயங்களின் கட்டமைப்பில் உள்ள சிற்பம் இவரது மற்றுமொரு படைப்பாகும். இதுதவிர ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள வெண்கலச் சிம்ம சிற்பம், கொழும்பு உயர்நீதிமன்றத்தில் உள்ள அஷ்டமங்கல சின்னங்களுடன் கூடிய வெள்ளிக் கொடிகள், பாப்பாண்டவரின் வருகையை முன்னிட்டு மாளிகாவத்தை புனித மரியாள் தேவாலயத்தில் வடிவமைக்கப்பட்ட இயேசுவின் உலோகச் சிற்பம் என்பன வரலாற்றுப் படைப்புகளாகும்.

கலைத்துறைக்கு அவர் வழங்கிய மதிப்புமிக்க பணியைப் பாராட்டி இந்த நாட்டின் கலைஞர்களுக்காக பல  விருதுகளையும் பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.