கொலை குற்றவாளிகள் வேறு கோர்ட்டில் சரண் அடையும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

புதுடெல்லி,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஆராவமுதன் என்பவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய காஞ்சீபுரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோர்ட்டில் சரண் அடைந்தது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கடந்த மார்ச் 8-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், ‘கொலை வழக்குகளில் தொடர்புடைய கோர்ட்டில் மட்டுமே சரண் அடைய வேண்டும். வேறொரு கோர்ட்டில் சரண் அடைந்தால் செல்லாது’ என்று உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் சார்பில் வக்கீல் பி.கருணாகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.நாகமுத்து வாதிட்டார். இந்த வாதங்களை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, மேல்முறையீட்டு மனுவுக்கு இரு வாரங்களுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.