வாராணசி கோயிலில் காவி உடையுடன் பூசாரிகள் வேடத்தில் காவலர்கள் – உ.பி.யில் சர்ச்சை

வாராணசி: காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பக்தர்கள் – பூசாரிகள் போல காவி உடை அணிந்து தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் பிரபல வழிபாட்டு தலங்களில் ஒன்றாக உள்ளது காசி விஸ்வநாதர் கோயில். இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வருவது வழக்கம். இந்தச் சூழலில், இக்கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியை கவனித்து வரும் காவலர்கள், பக்தர்கள் – பூசாரிகளை போல காவி உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

இது குறித்து வாரணாசி காவல் ஆணையர் மோகித் அகர்வால் கூறும்போது, “நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தரிசனத்துக்கான மன நிறைவை அளிக்க விரும்புகிறோம். அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கலின்றி தரிசிக்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சில நேரங்களில் காவலர்கள் தங்களை வலுக்கட்டாயமாக தள்ளுவதாக பக்தர்கள் புகார் தெரிவிப்பது உண்டு. அதுவே பூசாரிகள் அதனை சொன்னால் பணிவுடன் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு.

கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை கடுமையாக கண்டித்துள்ள அகிலேஷ் யாதவ், “காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.