லாகூர்,
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில், கடந்த 24 மணிநேரத்தில் 11 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மழை தொடர்பான சம்பவங்களில் 57 பேர் காயமடைந்தனர்.
இதனை மாகாண பேரிடர் மேலாண் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. பழைய கட்டிடங்கள் மற்றும் அவற்றை மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என அதுபற்றி இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
இதில், 27 வீடுகள் சேதமடைந்து உள்ளன. லாகூர், சியால்கோட், பைசலாபாத் மற்றும் குஜ்ரன்வாலா ஆகிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஜோப் பகுதியில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது, நேற்று 6 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட துயர சம்பவமும் நடந்தது.
இதேபோன்று ஸ்வாத் ஆற்றில் திடீரென ஏற்பட்ட நீர்மட்ட அதிகரிப்பால், அதில் சிக்கி, குடும்பத்துடன் சுற்றுலா சென்றவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். 4 பேர் மீட்கப்பட்டனர். 2 பேரை தேடி வருகின்றனர்.