சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக, அத்துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த ஆண்டு ஜன.7-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து விளக்குவதற்காகவும், கிராம மக்களின் பிரச்சினைகளை தெரிந்துகொள்ளவும் கடந்த 4 மாதங்களாக, தமிழகத்தில் கிராமங்கள் தோறும் சென்றேன்.
கடந்த மாதத்தில் திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். கிராமங்களில் இருக்கக்கூடிய பிரச்சினைகளின் தன்மை அதிர்ச்சி மற்றும் வேதனை அளிக்கக்கூடியதாக இருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் தேவேந்திர குலவேளாளர் மக்கள் வாழும் 60-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாக்கடை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கவில்லை.
இதுபோல, திண்டுக்கல் மாவட்டத்திலும் 40 சதவீதம் வேளாண் தொழிலில் ஈடுபடும் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு பாசன வசதிக்கு வைகை நதி நீர் கொடுக்கவில்லை. தேவேந்திர குல வேளாளர்கள், ஆதிதிராவிடர், அருந்ததியர், சிறுபான்மையினர் வாழும் பகுதியில் குடிநீர் வசதி செய்யவில்லை. இவர்கள் திட்டமிட்டு ஊராட்சி மன்றங்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு மனித உரிமை மீறல் ஆகும். எனவே, இந்த மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரி, நவ.20-ல் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்கிறது. அதேநேரத்தில், இது வெளிப்படையாக இருக்க வேண்டும். எந்தவித சந்தேகமும், குறைபாடும் இருக்கக்கூடாது.
தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடிக்கிறார்கள். இவர்கள் அரசுப் பணிக்கு செல்ல கடுமையாக படிக்கிறார்கள். ஆனால், திறமையை ஒதுக்கிவிட்டு, பணத்துக்காக பணி வழங்கும் சூழல் உருவானால் அது நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு தேர்வில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. எனவே, இந்தப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். இதற்கு பொறுப்பேற்று, துறை அமைச்சர் பதவி விலகவேண்டும்.
அதிமுகவில் நடைபெறும் விஷயங்கள் கஷ்டமாக இருக்கிறது. எங்கள் கட்சி மாநாட்டுக்கு பிறகு, புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு தெளிவுப்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.