பாட்னா: பிஹார் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில், பெகுசராய் பகுதியில் ராகுல் காந்தி இன்று உள்ளூர் மக்களுடன் இணைந்து ஒரு குளத்தில் இறங்கி மீன்பிடித்தார்.
பிஹாரின் பெகுசராய் என்ற இடத்தில் விஐபி கட்சியின் தலைவரும், துணை முதல்வர் வேட்பாளருமான முகேஷ் சாஹ்னியுடன் இணைந்து ஒரு குளத்தின் நடுப்பகுதிக்கு படகு மூலமாக சென்றார் ராகுல் காந்தி. தனது அடையாளமான வெள்ளை டி-சர்ட் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்த அவர், குளத்தில் நீந்தியபடி மீனவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக போஸ் கொடுத்தார்.
சம்பவ இடத்தில் ஏராளமான மீனவர்களும் இருந்தனர், அவர்களில் சிலர் இடுப்பு வரை தண்ணீரில் மூழ்கி ராகுல் காந்தியுடன் உரையாடினர்.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிஹார் மாநிலம் பெகுசராயில் உள்ள மீனவர் சமூகத்தினரை விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சாஹ்னியுடன் இன்று சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
அவர்களின் பணி எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், அவர்களின் சவால்களும் போராட்டங்களும் கடினமானவை. இருப்பினும், அவர்களின் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் ஆழமான புரிதல் எல்லா சூழ்நிலைகளிலும் ஊக்கமளிக்கின்றன.
பிஹாரின் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் மற்றும் அவற்றில் வாழும் மீனவர்கள், மாநிலத்தின் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். மீனவர்களின் உரிமைகள் மற்றும் மரியாதையை உறுதி செய்வதற்கான ஒவ்வொரு அடியிலும் நான் அவர்களுடன் நிற்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பெகுசராயில் மீன்பிடிக்கும் போது, சக மீனவர்களுடன் பேசினார், அவர்களின் பணியுடன் தொடர்புடைய சவால்கள் மற்றும் போராட்டங்களைப் பற்றி விவாதித்தார். விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானியும் இந்த சமயத்தில் உடனிருந்தார்.
பிஹார் தேர்தலில் மகா கூட்டணி வாக்குறுதிகள்: >> மீனவர்களுக்கு பணியில்லாத காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.5,000 உதவி பெறுவார்கள்.
>> மீன்வள காப்பீட்டுத் திட்டம் மற்றும் சந்தை வசதிகள் உறுதி செய்யப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் மீன் சந்தைகள், பயிற்சி மையங்கள் மற்றும் மானியத் திட்டங்கள் நிறுவப்படும்.
>> நீர் தேக்கக் கொள்கையின் கீழ் ஆறுகள் மற்றும் குளங்கள் புத்துயிர் பெறப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.