நம்ம குடலுக்குள்ள ஒரு தோட்டமே இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர்!

” ‘டாக்டர், நெஞ்சு எரிச்சலா இருக்கு, புளிச்ச ஏப்பம் வருது, சாப்பிட்டா மாட்டேங்குது, எதுக்களிக்குது’ என்று வருபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம். நாம் சாப்பிட்ட உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையைச் சென்று அடைய வேண்டும். இது ஒரு வழிப் பாதை. ஆனால், தற்போதைய உணவுப் பழக்கம், மது அருந்துதல் போன்ற பிரச்னைகளால் இரைப்பையில் இருக்க வேண்டிய உணவும், அமிலங்களும் உணவுக்குழாய்க்கு வருகின்றன. இதையே ‘அசிடிட்டி’ என்கிறோம். இந்தப் பிரச்னையால் சிலருக்கு உணவுக் குழாயில் எரிச்சல், புண் மற்றும் குரலில் மாற்றம் ஏற்படுகிறது. மேலும் நுரையீரலில் இருந்து பல்லின் எனாமல் வரை பாதிக்கப்படுகிறது.

gut health
gut health

எப்போதாவது விருந்து சாப்பிடும்போதோ, அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ளும்போதோ இதுபோன்ற பிரச்னை வந்தால் அதில் பாதிப்பு இருக்காது. ஆனால், வாரக்கணக்கில் இந்தப் பிரச்னை நீடித்தால் வருடத்தில் பல முறை இந்தப் பிரச்னை ஏற்பட்டால், கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். சுய மருத்துவத்தைத் தவிர்த்து, மருத்துவரை அணுகி, இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் டாக்டர் பாசுமணி.

சுயமாக மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்கிற டாக்டர் அதற்கான காரணத்தை விளக்கினார்.

”நம் உடல் 10 ஆயிரம் கோடி செல்களால் கட்டப்பட்டது என்றால், குடலில் மட்டும் 100 ஆயிரம் கோடி பாக்டீரியா உள்ளன. குடலுக்குள் ஒரு தோட்டமே இருக்கிறது. ஏன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நாம் உயிர்வாழ அந்த பாக்டீரியாவும் நம்மோடு சேர்ந்து வாழ்கிறது. நோய்த்தொற்று, ஃபுட் பாய்சன் போன்றவற்றின்போது இந்த பாக்டீரியா பாதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுக்கும்போது இந்த நன்மை செய்யும் பாக்டீரியாவும் சேர்ந்து பாதிக்கப்படும்.

மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டும் இதுபோன்ற மருந்துகளை எடுக்கும்போது இந்த பாக்டீரியாவுக்குப் பாதிப்பு நேராமலும், அப்படியே ஏற்பட்டாலும் அது சிறிய அளவில் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளப்படும். இதனால், உணவுச் செரிமானத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். நீங்களாக மருந்து எடுத்தால், பாக்டீரியா அழிக்கப்படும். மீண்டும் அந்தத் தோட்டத்தைக் கட்டி எழுப்ப ஒரு வருடம்கூட ஆகலாம்’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் பாசுமணி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.