137 ஆண்டுகளில் மிகக் குறுகிய ஆஷஸ் டெஸ்ட்! பெர்த் போட்டி சாதனைகள்

Ashes Test : சரவெடிக்கு பஞ்சமில்லாமல் பெர்த் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டி. இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்க பூமியாக இருக்கிறதே என எல்லோரும் விமர்சித்துக்  கொண்டிருக்கும்போது, அதே மைதானத்தில் அதிரடி சரவெடிகளை வெடித்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து மின்னல்வேக சதத்தை பதிவு செய்தார் டிராவிஸ் ஹெட். அவரின் இந்த அதிரடி மூலம் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றி பெற்றது. அத்துடன் ஆஷஸ் தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது. இன்னொரு முக்கியமான விஷயம் 137 ஆண்டுகளில் மிகக் குறுகிய நேரத்தில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியாகவும் பதிவாகியிருக்கிறது.

Add Zee News as a Preferred Source

டிராவிஸ் ஹெட் அபார ஆட்டம்

பெர்த் போட்டியில் இங்கிலாந்து அணி 205 ரன்கள் என்ற வெற்றி இலக்கை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது. மூன்று இன்னிங்ஸ்களிலும் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், இந்த இன்னிங்ஸிலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மாயாஜாலம் காட்டுவார்கள், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவது சிரமம் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், டிராவிஸ் ஹெட் அந்த நினைப்பை எல்லாம் தலைகீழாக மாற்றினார். இல்லை.. தவிடு பொடியாக்கிவிட்டார்.

உஸ்மான் கவாஜா தான் இந்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணிக்கு ஓப்பனிங் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு ஏற்பட்ட முதுகு பிடிப்பு காரணமாக, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு பெற்ற டிராவிஸ் ஹெட்டுக்கு கிடைத்தது. இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் டிராவிஸ் ஹெட். களமிறங்கியது முதல் சரவெடி தான். 83 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 123 ரன்கள் குவித்த, ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். அத்துடன் பல வரலாற்று சாதனைகளையும் படைத்தார்.

முதலில், டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்ட் உடன் இணைந்து 75 ரன்கள் சேர்த்து அணிக்கு நல்ல அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தார். பின்னர், மார்னஸ் லபுஷேன் உடன் இணைந்து, ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்தார். இந்த கூட்டணி 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா, ஒரு ஓவருக்கு 7 ரன்ரேட் விகிதத்தில், வெறும் 28.2 ஓவர்களிலேயே இலக்கைத் துரத்தி வெற்றி பெற்றது. ஹெட்-டின் அதிரடி ஆட்டம், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தது. இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் வெறும் 69 பந்துகளில் சதம் அடித்தார். 

இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்த இந்தப்போட்டியில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டிராவிஸ் ஹெட் பல சாதனைகளை படைத்தார்.

பெர்த் டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் 

605 – இந்த பெர்த் டெஸ்ட் போட்டி, வீசப்பட்ட பந்துகளின் அடிப்படையில் ஆஷஸ் வரலாற்றில் மூன்றாவது மிகக் குறுகிய டெஸ்ட் போட்டியாகும். இதை விடக் குறைவான பந்துகள் வீசப்பட்ட டெஸ்ட்கள்: மான்செஸ்டர் டெஸ்ட் (1988) – 788 பந்துகள், லார்ட்ஸ் டெஸ்ட் (1888) – 792 பந்துகள்.

69 – டிராவிஸ் ஹெட் வெறும் 69 பந்துகளில் சதம் அடித்து, ஆஷஸ் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் அடித்தார். முதலிடத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் உள்ளார். அவர் 57 பந்துகளில் இதே பெர்த் மைதானத்தில் 2006 ஆம் ஆண்டு சதமடித்தார்.

69 – டிராவிஸ் ஹெட், 69 பந்துகளில் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட நான்காவது அதிவேக சதம் என்ற சாதனையைப் படைத்தார். இதன் மூலம், ஜானி பேர்ஸ்டோ 77 பந்துகளில் நியூசிலாந்துக்கு எதிராக 2022ல் சதம் அடித்த சாதனையை முறியடித்தார்.

69 – டிராவிஸ் ஹெட் டெஸ்ட் வரலாற்றில் ஒரு தொடக்க ஆட்டக்காரரின் அதிவேக சதம் என்ற சாதனையைச் சமன் செய்தார். இதற்கு முன், டேவிட் வார்னர் மட்டுமே 69 பந்துகளில் சதம் அடித்துள்ளார். அதுவும் இந்தியாவுக்கு எதிராக இதே பெர்த் மைதானத்தில் 2012 ஆம் ஆண்டு சதமடித்தார்.

4 – டிராவிஸ் ஹெட், நான்காவது இன்னிங்ஸ் இலக்கைத் துரத்தி, வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டியில், ஒரு ஆஸ்திரேலிய வீரரால் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் என்ற சாதனையைப் படைத்தார்.

மேலும் படிக்க | இந்திய அணியில் மீண்டும் தோனி? உலகக் கோப்பைக்கு பிளான் – அப்போ கம்பீருக்கு ஆப்பா?

மேலும் படிக்க | மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்… வெளியான புதிய தகவல்

About the Author


Karthikeyan Sekar

I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.