உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கௌசல்யா இன்று (09.12.25) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கும் சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டினார்.

அவர் பேசியதாவது, “எங்களுடைய சம்பவம் நடந்தபோது கலைஞர் கருணாநிதி, ‘தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த தகவல் வந்துள்ளது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடைமுறைகளை பின்பற்றி மக்கள் மத்தியில் சாதிய கொடுமைகளைக் களைய வழிவகுக்க வேண்டும்’ என எங்களுக்கு ஆதரவளித்திருந்தார்.
2017 இல் திருப்பூர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளான அன்னலெட்சுமியும் பாண்டிதுரையும் விடுவிக்கப்பட்டனர்.
2020 இல் A1 குற்றவாளியான சின்னசாமி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்கள், ‘சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசு தவறிவிட்டது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் தண்டனை குறைப்பும் விடுவிப்புமே தீர்ப்பாக வந்துள்ளன. அரசுத்தரப்பில் உரிய ஆதாரங்களைச் சாட்சியங்களைச் சமர்பிக்க காவல்துறை தவறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டிலாவது தமிழக அரசு கௌசல்யாவுக்கு துணை நின்று நீதிபெற்றுக் கொடுக்குமா? என என் பக்கம் நின்று பேசியிருந்தார். ஆனால், அதே ஸ்டாலின் இப்போது முதல்வராக இருக்கிறார். இப்போது அவர் எனக்கு நீதி கிடைக்க துணையாக இருந்திருக்க வேண்டும்.
அவர் துணையாக நிற்கவில்லையே. சிசிடிவியில் பதிவான நபர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எதிர்த்துதான் 2020 செப்டம்பர் 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றோம்.
அங்கு எங்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய அரசு துணையாக இல்லை. பல முறை விரைவு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தோம். அதையும் அரசு மெத்தனப்போக்காகத்தான் அணுகியது. கடைசியாக நவம்பரில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆவணங்களை மொழிப்பெயர்க்க ஆறு மாத அவகாசம் தேவை என்றனர். சாதிய வாக்குகள் பறிபோய் விடக்கூடாது என்பதற்காகத்தான் எங்களின் வழக்கை மெத்தனமாக இழுத்தடிக்க முயல்கிறார்கள்.

உங்களால் 6 மாதத்தில் மொழிப்பெயர்ப்பு செய்ய முடியுமெனில், ஐந்தரை ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? அரசு சார்பில் ஒரு விரைவு மனுவைக் கூட தாக்கல் செய்யவில்லையே? அரசு வழக்கறிஞர்களும் யாரும் என்னை அழைத்துப் பேசவில்லையே.
எங்களை வெட்டிய அந்தக் கூலிப்படைக்கும் எங்களுக்கும் என்ன முன் தகராறு இருக்கிறது? அவர்கள் ஏன் எங்களை வெட்ட வேண்டும்? உண்மையில், அவர்களின் பின்னால் இருப்பவர்களைத்தான் நாம் உறுதியாகத் தண்டிக்க வேண்டும்.
சாதியவாதிகளின் வாக்குதான் வேண்டுமென்றால் அதை வெளிப்படையாகக் கூறுங்கள். எதற்காக சமூக நீதி அரசு, கௌசல்யாவுடன் துணை நிற்போம் என்றெல்லாம் பேசினீர்கள்? இதில் கவனம் செல்லுத்தினால் சாதியவாதிகளின் வாக்கு போய்விடும் என நினைக்கிறார்கள். ஆனால், தமிழகம் அப்படியான மண் அல்ல” எனக் காட்டமாகப் பேசி முடித்தார்.
கௌசல்யா பேசி முடித்தவுடன், அவரிடம் தனியாகவும் உரையாடினோம்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு மனரீதியாக நீங்கள் எப்படியான விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள்?
சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படியொரு சம்பவத்திலிருந்து மனரீதியாக மீண்டு வருவதே பெரும் போராட்டம். அதிலிருந்து மீண்டு வந்து இதையே பணியாக எடுத்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். மக்கள் மத்தியில் ஆணவப்படுகொலைகளைப் பற்றியும் சாதிய ஒழிப்பைப் பற்றியும் தீவிரமாகப் பேசி வருகிறேன்.
அப்படியிருக்க ஒரு அரசின் இப்படியான மெத்தனப் போக்குகள் என் கால்களைப் பிடித்து இழுப்பதைப் போன்ற அயர்ச்சியைக் கொடுக்கிறது. எனக்கு நீதி கிடைத்தால்தானே, அதைச் சாட்சியாக வைத்து என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்குமென நம்பிக்கையூட்ட முடியும்? இப்போது அந்த நம்பிக்கையையே இவர்கள் அறுத்துப் போட முயல்கிறார்கள்.

அப்போதைய கலைஞரும், இப்போதைய முதல்வர் ஸ்டாலினும் உங்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்ததைக் குறிப்பிட்டீர்கள். இப்போது எங்கே அவர்கள் தவறி நிற்கிறார்கள் என நினைக்கிறார்கள்?
திமுக ஆட்சியமைந்த போது நிஜமாகவே எனக்கு நீதி கிடைக்கும் என நம்பினேன். சமூக நீதி பேசும் இந்த அரசு நியாயத்தின் பக்கம் நிற்கும் என நினைத்தேன். ஆனால், நீதிமன்றத்தில் வேண்டுமென்றே தாமதிக்கிறார்கள். வழக்கை விரைந்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேல்முறையீட்டில் கொலை செய்த தரப்புக்கு எதிராக எந்த வாதத்தையும் முன் வைக்கவில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் 15,000 பக்கங்கள் கொண்ட வழக்கின் கோப்புகளில் 500 பக்கங்களைக் காணவில்லை எனக் கூறினர்.

அதை வைத்தே மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டனர். இப்போது மொழிப்பெயர்க்க வேண்டுமென 6 மாதங்களைக் கேட்கிறார்கள். இவ்வளவு அலட்சியத்தைப் பார்க்கையில், இந்த வழக்கில் நீதி கிடைக்கக் கூடாதென அரசு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பதைப் போல தோன்றுகிறது.
சமூக நீதி பேசும் இந்த அரசே ஆணவக்கொலைக்கு எதிராக வலுவாக நிற்கவில்லையெனில் வேறெந்த கட்சி, வேறெந்த அரசு சாதியவாதிகளுக்கு எதிராக நிற்கும்?
ஆணவப்படுகொலைகளுக்குத் தனிச்சட்டம் இயற்ற முதல்வர் ஒரு கமிஷனை அமைத்திருக்கிறாரே. அதையெல்லாம் நீங்கள் ஒரு நம்பிக்கையாக பார்க்கவில்லையா?
ஆணவக்கொலைகளுக்குத் தனிச்சட்டம் வேண்டாம் என்ற மனநிலையில் இருந்த முதல்வர், இப்போது தனி கமிஷன் அமைத்திருப்பது நம்பிக்கையான விஷயம். அடுத்தடுத்த ஆணவப்படுகொலையால் மக்கள் மத்தியில் எழுந்த அழுத்தத்தால் அந்த கமிஷனை அமைத்திருக்கிறார். ஆனால், அந்த கமிஷன் எப்படி செயல்படுகிறது எனப் பாருங்கள்.
கமிஷன் அமைக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் ஆணவக்கொலைகளால் பாதிக்கப்பட்ட யாரையும் அந்த கமிஷன் சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காமல் எப்படி சட்டம் இயற்றுவீர்கள்? இதிலும் மெத்தனப் போக்கைக் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுங்கட்சி மீது கடும் குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள். அதிமுக, பாஜக, விசிக, கம்யூனிஸ்டுகள், புதிதாகத் தொடங்கப்பட்ட தவெக என எந்த எதிர்க்கட்சியாவது உங்களை அணுகினார்களா? வழக்கு விவரங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார்களா?
விசிகவும் இடதுசாரி கட்சிகளுமே தொடர்ச்சியாக எனக்காக நிற்கின்றன. என் வலியை அதிகார வர்க்கத்திற்குக் கடத்த முயற்சிக்கின்றனர். அவர்களின் அழுத்தத்தால்தான் இப்போது கமிஷன் வரை வந்திருக்கிறார்கள். மற்ற எந்தக் கட்சியும் எனக்காக நிற்கவில்லை.
ஆணவக்கொலை எனப் பேசவே அவர்கள் பயப்படுகிறார்களே. அந்த வார்த்தையை உச்சரிக்கவே தயங்குபவர்கள் எப்படி எனக்காக நிற்பார்கள்? ஆணவப்படுகொலைகளை இன்னும் பிளவு அரசியல் செய்யத்தான் அவர்கள் நினைப்பார்கள். சமூகநீதி பேசும் கட்சியே அவ்வளவு மெத்தனமாக இருக்கும் போது, மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்?” என்று பதிலளித்தார்.