2026 டி20 உலக கோப்பை கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கியது. கடந்த 9 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக சூப்பர் 8 சுற்று நடைபெற உள்ளது. அதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். இந்திய அணி நேற்று பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியுடன் எந்தெந்த அணிகள் மோதும் என்ற அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. மூன்று பலம் வாய்ந்த அணிகள் இந்தியாவுடன் சூப்பர் 8 சுற்றில் மோத உள்ளனர்.
Add Zee News as a Preferred Source
சூப்பர் 8 சுற்று
பொதுவாக ஒரு தொடரில் புள்ளிகளின் அடிப்படையிலேயே அடுத்த சுற்றுக்கான அட்டவணை தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த முறை ஐசிசி புதிய முறையை வகுத்துள்ளது. அதன்படி அணிகளுக்கு முன்கூட்டியே ப்ரீ சீடிங் எண்களை வழங்கி உள்ளது. இதன்படி ஒரு அணி லீக் சுற்றில் எந்த இடத்தை பிடித்தாலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண் அடிப்படையிலேயே சூப்பர் 8 அட்டவணை அமையும். அதன்படி இந்தியாவிற்கு X1 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி தங்களது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியின் முடிவு சூப்பர் 8 அட்டவணையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் இந்திய அணி ஏற்கனவே மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
சூப்பர் 8: இந்தியாவின் எதிரிகள் யார்?
இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் எதிர்கொள்ளப்போகும் அணிகள் சாதாரணமானவை அல்ல. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய பலம் வாய்ந்த அணிகள் இந்தியாவின் குரூப்பில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஐசிசி கணிப்பின்படி அணிகளின் நிலை:
X1: இந்தியா
X2: ஆஸ்திரேலியா
X3: வெஸ்ட் இண்டீஸ்
X4: தென்னாப்பிரிக்கா
இந்தியா தனது முதல் சூப்பர் 8 போட்டியில், ‘X4’ என வகைப்படுத்தப்பட்ட அணியை எதிர்கொள்ளும். அது பெரும்பாலும் 2024 டி20 உலகக் கோப்பை ரன்னர்-அப் அணியான தென்னாப்பிரிக்காவாக இருக்கும். தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளிடம் தோற்றால் மட்டுமே இந்த நிலை மாறும். ஆனால், தற்போதுள்ள ஃபார்மை பார்க்கும்போது அது நடக்க வாய்ப்பில்லை. அடுத்ததாக, இந்தியா ‘X2’ அணியை எதிர்கொள்ளும். இது பெரும்பாலும் ஆஸ்திரேலியாவாக இருக்கும். ஆஸ்திரேலியா இலங்கையிடம் தோற்றால் இது மாறலாம். கடைசியாக, இந்தியா ‘X3’ அணியான வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளும். வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது.
இந்தியாவின் சூப்பர் 8 அட்டவணை
பிப்ரவரி 22 (ஞாயிறு): இந்தியா vs தென்னாப்பிரிக்கா (கணிப்பு) – இடம்: நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்.
பிப்ரவரி 26 (வியாழன்): இந்தியா vs ஆஸ்திரேலியா (கணிப்பு) – இடம்: எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை.
மார்ச் 1 (ஞாயிறு): இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் (உறுதி) – இடம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா.
ரசிகர்களின் கலக்கம்
சூப்பர் 8 சுற்றில் இந்தியா மோதும் மூன்று அணிகளுமே டி20 கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள். தென்னாப்பிரிக்கா பேட்டிங்கில் மிரட்டுகிறது, ஆஸ்திரேலியா எப்போதுமே நாக்-அவுட் போட்டிகளில் ஆபத்தானது, வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னர்கள். இதனால், இந்தியா அரையிறுதிக்கு செல்வது அவ்வளவு எளிதாக இருக்காது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் போட்டி ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸுடனான மோதலும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
About the Author
RK Spark