Australia From T20 World Cup Eliminated Reason: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி வெளியேறி இருக்கிறது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த அணி கோப்பையை வெல்லாது என பேசப்பட்டாலும் நிச்சயம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் லீக் தொடரோடு வெளியேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Add Zee News as a Preferred Source
டி20 உலகக் கோப்பையை விட்டு வெளியேறிய ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா அணி இத்தொடரின் தொடக்கம் முதலே சவால்களை சந்தித்து வந்தது. அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேசில்வுட் வெளியேறினார். அதன்பின் முதல் இரண்டு போட்டியில் மிட்செல் மார்ஷ் மற்றும் டிம் டேவிட் காயம் காரணமாக வெளியேறி இருந்தனர். அதேபோல் முக்கிய நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ் இல்லாதது, ஆஸ்திரேலியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. இப்படி பல சவால்களை சந்தித்த அணி ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணியுடன் படுதோல்வியை அடைந்து டி20 உலகக் கோப்பையை விட்டு வெளியேறி உள்ளது.
மைக்கேல் வாகன் சாடல்
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், அவரது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு கடுமையாக சாடியும் உள்ளார்.
இது தொடர்பாக பேசிய மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியா அணி தற்போது வெளியேறி இருக்கிறது. மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் அவசரமாக வரவழைக்கப்பட்டார். ஆனால் அவர் ஏன் தொடரின் தொடக்கத்திலேயே அணியில் இல்லை என்பது எனக்கு புரியவில்லை. அவரை போன்ற வீரரை ஆஸ்திரேலியா தேர்வு செய்திருக்க வேண்டும். அவரை அணியில் எடுக்காமல் அவர்கள் தவறு செய்துவிட்டார்கள்.
மிடில் ஓவர்களில் ரன்களை சேர்க்க ஸ்மித் தேவை
ஸ்டீவ் ஸ்மித் பிக் பாஷ் தொடரில் எப்படி விளையாடினார் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். அவர் வேகப்பந்து வீச்சாக இருந்தாலும் சரி, ஸ்பின்னாக இருந்தாலும் சரி, இரண்டையுமே அவர் லாவகமாக கையாள்வார். ஆசிய கண்டத்தில் இருக்கும் மைதானங்களில் சுழற்பந்து வீச்சு எப்போதுமே சவாலானதாக இருக்கும். மிடில் ஓவர்களில் விக்கெட்டை தக்கவைத்து கொண்டு ரன்களை சேர்க்க அவரை போன்ற ஒரு வீரர் தேவை. அவரை தேர்வு செய்யாமல் ஆஸ்திரேலியா தவறு செய்து விட்டது என்றுதான் கூறுவேன் என மைக்கேல் வாகன் பேசி இருக்கிறார்.
பிக் பாஷ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்
சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஷ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் அத்தொடரில் 299 ரன்களை குவித்து அசத்தினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 168 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji