நல்ல முயற்சி ருத்து; ஆனால் மீண்டும் முயற்சிக்காதீர்கள்! – கடுப்பேற்றிய சி.எஸ்.கே; வெறியான ரசிகர்கள்!

மும்பைக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக வென்ற பிறகு சேப்பாக்கத்தில் சொந்த மண்ணில் சென்னை மிக மோசமாக தோற்றிருக்கிறது. வான்கடேவில் வென்ற பிறகு அதிர்ச்சியடைந்த ப்ளெம்மிங், ‘உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பு!’ ‘நீ ஒண்ணும் கவலைப்படாதே ப்ரோ. நாங்க உன் கூட இல்ல’ ‘நீ கான்பிடண்டா இரு. உன்னால முடியாது’ என அத்தனை வீரர்களையும் கட்டி வைத்து டீமோட்டிவேட் செய்திருப்பார் போல. அத்தனை நெகட்டிவ் எனர்ஜியோடு இறங்கி ருத்துராஜ் & கோ சொதப்பியிருக்கின்றனர்.

CSK vs GT
CSK vs GT

வானத்தைப் போல’ லெவலில் இன்னொரு தியரியும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது, தோனி காயத்திலிருந்து குணமடைந்திருந்தாலும், அணியின் ‘வின்னிங் காம்பீனேஷன்’னை குலைக்க விரும்பாததால் அவரே முன்வந்து ஆடவில்லை என்கின்றனர். தோனி இப்படி கூறிவிட்டதால் விரக்தியடைந்த ‘Thala for a Reason’ தம்பிகள், அண்ணனை எப்படியாவது ஆட வைக்க வேண்டும் என்பதற்காக ஸ்லீப்பர்செல்களை ஒழிக்க உயிரை தியாகம் செய்யும் மேஜர் ஜெகதீஸ் போல போட்டியை தியாகம் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டனர் என்கின்றனர்.

‘இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு!’ என்றால், ‘நம்பாட்டி மட்டும் நாங்க ஜெயிக்கவா போறோம்’ என சேப்பாக்கம் ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறார் ருத்துராஜ்.

சென்னை அணிதான் முதலில் பேட்டிங் செய்தது. ‘அடிக்கிற வெயிலுக்கு நட்ட நடு மைதானத்துல நின்னு பேட்டிங்கெல்லாம் ஆட சொல்றீங்களேடா’ என அலுத்துக் கொண்டிருந்த சென்னை பேட்டர்கள் சடசடவென விக்கெட்டுகளை விட்டு ஆட்டமிழந்தனர். 43-4 என சென்னை அணி தடுமாறியது. ரபாடாவும் சிராஜூம் இப்போது பாய்ந்தால்தான் உண்டு என சரமாரியாக அட்டாக் செய்தனர்.

Ruturaj
Ruturaj

ஆனால், ருத்துராஜ் மட்டும் ஒரு முனையில் நங்கூரம் போல நின்றார். 30 யார்டு சர்க்கிளிலிருந்து தபதபவென ஓடி வந்து 135 கி.மீ வேகத்தில் வீசும் பௌலர்களின் பந்தை கட்டை விரலுக்குள் மடக்கி மட்டையை போட்டு டிபன்ஸ் ஆடினார். பார்ப்பதற்கு அத்தனை அலாதியாக இருந்தது. இடையில் சில பந்துகளை ‘Well Left’ செய்தும் மைதானத்தில் கூடியிருந்த Knowledgeable Crowd இன் கரகோஷங்களை அள்ளினார். ஸ்ட்ரைக் ரெட் 50 யை தாண்டவில்லையே.

பார்க்கும் நமக்கே மஞ்சள் ஜெர்சி அப்படியே உருமாறி வெள்ளை ஜெர்சியாக தெரிந்தது. போட்டி அப்படியே ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் செஷனைப் போல இருந்தது. ருத்து தன் டிபன்ஸிவ் ஸ்கில் அத்தனையையும் ஒட்டுமொத்தமாக இறக்கியிருந்தார். பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. ‘யோவ் இது டி20 ய்யா…12 ஓவருக்குள்ள 50 டாட் ஆடியிருக்கீங்க…’ எனக் கூற அதையும் ஆமோதித்துக் கொண்டு, ‘பரவால்ல…இது நல்லாருக்கு’ நான்கே நான்கு பேர் மட்டும் மைதானத்தில் கைத்தட்டிக் கொண்டிருந்தனர். டைம் அவுட்டில் உள்ளே வந்த ப்ளெம்மிங் ‘துரை அண்ணன் பையன்…’ ‘முண்டாசு சூரியனே…’ என சில ஜகஜால மந்திரங்களை ருத்துவின் காதில் ஓதிவிட்டு சென்றார். இதன்பிறகு, ருத்து கொஞ்சம் வேகமெடுத்தார்.

Ruturaj
Ruturaj

அர்ஷத்தின் பந்தில் சிக்சர்களை பறக்கவிட்டார். 49 பந்தில் இந்த சீசனின் மிகவும் மெதுவான அரைசதத்தை கடந்தார். ‘இப்போலாம் டெஸ்ட் மேட்ச்ல கூட யாரும் இப்படி ஆடுறதில்லடா…’ என்ற ரசிகர்களின் மனக்குமுறல் டீமின் பெவிலியனுக்கே கேட்டுவிட்டது. ‘5 கப்பு…5 கப்பு…ஆண்ட பரம்பரை…’ என சைகையிலேயே சிக்னல் காட்ட, ரசிகர்கள் கொஞ்சம் சாந்தமாகினர். ‘அவன் அடிச்சான்னா அடி விழாது இடி விழும்’ என தினுசு தினுசாக கார்த்திக் சர்மாவுக்கு பில்டப் கொடுத்துவிட்டார்கள். இந்தப் போட்டியில்தான் அதற்கு ஏற்றவகையில் கொஞ்சம் பேட்டை சுழற்றி ஆடினார்.

ரபாடாவின் பந்திலேயே இரண்டு பவுண்டரிக்களை அடித்தார். ‘தாய்நாட்டுக்காக உயிரை கூட கொடுப்பேன்’ மோடில் ஆடிக்கொண்டிருக்கும் ஓவர்டனும் கடைசியில் கொஞ்சம் அதிரடி காட்டி ஸ்கோர் 150 யைத் தாண்ட உதவினார். கடைசி ஓவரை ஸ்பின்னர் சுதர் வீசினார். இந்த ஓவரில் ருத்து 3 பவுண்டரிக்களை அடித்திருந்தாலும் ஓவரின் இரண்டாவது பந்தை, டீப்ரேக்குக்கு முன்பு வீசப்படும் கடைசி ஓவரின் பந்து போல கூலாக ‘Well Left’ செய்தார். சேப்பாக்கமே அதிர்ந்து போய்விட்டது. ‘ஹம்சா ருத்து மசாரி’ வெளிப்படையாக தன் முகத்தை காட்டிய தருணம் அது.

Rabada & Siraj
Rabada & Siraj

குஜராத்துக்கு 159 ரன்கள் டார்கெட். 250 ரன்களே அசால்ட்டாக சேஸ் செய்யப்படும் சூழலில், இந்த டார்கெட்டையெல்லாம் ஊதி தள்ளிவிடுவார்கள் என சென்னை ரசிகர்களுக்கு தெரியும். ஆனாலும் என்ன செய்ய வாங்கிய டிக்கெட்டுக்காக போட்டி முடியும் வரை உட்காந்திருந்து கடல் காற்றை வாங்கிவிட்டு சென்றனர். ரசிகர்கள் எதிர்பார்த்ததை போலவே போட்டியில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. 17 வது ஓவரில் ஜாலியாக சேஸை முடித்தது குஜராத் அணி. ‘ஹான்…ஹலோ மாலிக்…’ என முழு கண்டெய்னர் லாரியை சேப்பாக்கத்தில் கவிழ்த்துவிட்டு தோனியின் பிட்னஸ் அப்டேட் கேட்டு பெவிலியனுக்கு திரும்பினார் ருத்துராஜ்.

CSK
CSK

சென்னை அணி தோற்பதில் கூட பிரச்னை இல்லை. ஆனால், பூமர்த்தனமாக ஆடி தோற்பதில்தான் பிரச்னை. இன்னமும் 2015 இல் ஆடியதைப் போலவே ஆடிக் கொண்டிருக்கின்றனர். நவீன டி20 இன் ட்ரெண்டே சி.எஸ்.கேவுக்கு பிடிபடவில்லை. 18 வருட பழைய கோச், உத்வேகமே இல்லாத பழங்காலத்து ஸ்டைலை நம்பும் கேப்டன் என சென்னை அணியை பார்க்க ‘மதராசப்பட்டினம்’ படம் பார்ப்பதைப் போல விண்டேஜ் பீலிங்தான் வருகிறதே தவிர, சண்டை செய்வதற்கு ஏற்ற தாதாக்களாக இவர்கள் இல்லை. அணியின் வியூக வகுப்பு குழுவின் மூளையை கழட்டி புனரமைப்புப் பணிகளை செய்து லேட்டஸ்ட் சிப்பை சொருகிவிட்டால் மட்டுமே கொஞ்சமாவது தப்பிப்பார்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.