இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் (Biopic) சாய் பல்லவிக்குப் பதிலாக கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகி இணையத்தில் பேசுபொருளானது. கௌதம் தின்னனுரி இயக்கவுள்ள இப்படத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

சாய் பல்லவி இப்படத்தில் இருந்து விலகவில்லை என்றும், `ராமாயணம்’ போன்ற மற்ற படங்களின் தேதிகள் காரணமாகவே படப்பிடிப்பு தாமதமாகியுள்ளது என்றும் படக்குழு தரப்பில் சமீபத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சாய் பல்லவி, ருக்மினி வசந்த் ஆகிய இருவரின் நடிப்புத் திறன், கடந்த கால கதாபாத்திரங்கள் என இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரோலுக்கு இருவருமே பொருத்தமானவர்கள்தான்.
சாய் பல்லவி
கதாநாயகியாக அறிமுகப் படம் : பிரேமம் (மலையாளம்)
முக்கியமான படங்கள்: அமரன், ஷியாம் சிங்கா ராய், கார்கி, பிரேமம்
நடிப்பு பாணி: இயல்பான நடிப்பு, கலை, உடல்மொழி சார்ந்த வெளிப்பாடு
பலம் : உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்துவது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி முதல் தேர்வாக இருந்ததற்கு பல வலுவான காரணங்கள் உள்ளன. சாய் பல்லவி அடிப்படையில் ஒரு சிறந்த நடனக் கலைஞர். `ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் அவர் வெளிப்படுத்திய கிளாசிக்கல் நடன அசைவுகள், பாரம்பர்யமான தோற்றம் மற்றும் முகபாவனைகள், ஒரு பழம்பெரும் கர்நாடக பாடகியின் உடல்மொழியோடு எளிதாக ஒத்துப்போகும்.
`கார்கி’ படத்தில் நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக அவர் காட்டிய முதிர்ச்சியான நடிப்பு, எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் வாழ்க்கையில் சந்தித்த ஆரம்பக்கட்டப் போராட்டங்களையும், இசை உலகில் அவர் செய்த சாதனைகளையும் திரையில் கொண்டு வர பெரிதும் உதவும்.
சாய் பல்லவி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வார். இந்தப் படத்திற்காக அவர் கர்நாடக சங்கீத வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற்றார் என்ற செய்திகளும் வந்துள்ளன. மேக்கப் இல்லாத அவரது இயல்பான தோற்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் எளிமையை அப்படியே பிரதிபலிக்கும்.

ருக்மினி வசந்த்
அறிமுகப் படம்: பீர்பால் (கன்னடம்)
முக்கியமான படங்கள்: சப்த சாகரதாச்சே எல்லோ, காந்தாரா சாப்டர் 1
நடிப்பு பாணி: நுட்பமான முகபாவனைகள்
பலம்: ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்த நடிப்பு
ஒருவேளை ருக்மினி வசந்த் இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரிடமும் சில தனித்துவமான சிறப்பம்சங்கள் உள்ளன. எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றாலே அமைதியும், தெய்வீகக் களையும்தான் நினைவுக்கு வரும்.
ருக்மினி வசந்தின் முக அமைப்பு மற்றும் அவரது கண்கள், பழைய புகைப்படங்களில் நாம் பார்க்கும் எம்.எஸ்.அம்மாவின் முகச்சாயலோடு நெருக்கமாக ஒத்துப்போகிறது. பல சினிமா விமர்சகர்களும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

`சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தில் ருக்மினி வசந்த் காட்டிய நுண்ணிய முகபாவனைகள் மற்றும் வலியைக் கண்களாலேயே கடத்தும் விதம் ரசிகர்களை வியக்க வைத்தது. ஆர்ப்பாட்டமில்லாத, ஆழமான நடிப்புக்கு அவர் ஒரு சிறந்த உதாரணம். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஆன்மீகத் தேடலை திரையில் காட்ட இந்த நடிப்பு பாணி உதவும்.
யார் நடித்தாலும், கர்நாடக இசையின் முடிசூடா ராணியான எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெருமையை திரை வழியே காண்பது சினிமா மற்றும் இசை ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாகவே அமையும்.
இவர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் அல்லது இவர்களைத் தவிர வேறு யார் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை கமெண்ட்டில் நீங்களும் சொல்லுங்கள்.