கதறி துடித்து தரையில் உருண்ட பள்ளி மாணவிகள்… புதுவித மன நோயால் பாதிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் பாகேஷ்வரில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் மாணவிகள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வகுப்பை விட்டு வெளியேறி கத்தி கூச்சலிட்டுள்ளனர். பின்னர், அனைவரும் புலம்பியவாறு தங்களது தலை முடியை கலைத்துக்கொண்டு தரையில் உருண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியைகள் மாணவிகளை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளனர்.

ஆனால், மாணவிகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பின்னர் பள்ளிக்கு வந்த மருத்துவ குழு மாணவிகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு “மாஸ் ஹிஸ்டீரியா” என்ற மன அழுத்த பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. மாணவிகளுக்கு எதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்று மருத்துவ குழு ஆராய்ந்ததில், சாமோலி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு அப்பள்ளியின் மாணவி உயிர் இழந்ததாகவும், அந்த துக்கத்திலிருந்து மாணவிகளால் மீள முடியவில்லை என்பதும் தெரியவந்தது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும், பார்வைக் குறைபாடு உடையவர்களாகவும், மிகவும் பதட்டமாக இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

உத்தர்காண்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதிரியான சம்பவம் நடந்ததாகவும் அரசு பள்ளி மாணவிகள் “மாஸ் ஹிஸ்டீரியா” பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இதே அறிகுறிகளுடன் நடந்துகொண்டதாவும் கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளி வளாகத்திற்குள் பூஜை செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் பள்ளிக்கு அழிவு ஏற்படும் என்று நம்புகின்றனராம்.

இதுகுறித்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை முகுல் சதி கூறுகையில், சக்ரதா மற்றும் உத்தர்காஷியில் உள்ள சில பள்ளிகளிலும் ”மாஸ் ஹிஸ்டீரியா” வழக்குகள் பதிவாகியுள்ளன. மாணவர்களிடையே உள்ள அச்சத்தைப் போக்குவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று பரிசோதனை நடத்த சிறப்பு மருத்துவக் குழுவை உருவாக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதனிடையே, ”மாஸ் ஹிஸ்டீரியா” பிரச்சினையால் கத்தி கூச்சலிடும் மாணவிகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.