பார்த்திபனை நெகிழ வைத்த மும்தாஜ்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மும்தாஜிற்கு ஒரு அவசர தேவைக்கு 15 ஆயிரம் கொடுத்து உதவி இருக்கிறார். அதனை இப்போது பார்த்திபனை நேரில் சந்தித்து திருப்பிக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார் மும்தாஜ். இந்த நிகழ்வை இருவரும் தங்கள் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பார்த்திபன் தனது பதிவில் ” நண்பர் மூலமாக மும்தாஜ் பர்தா அணிந்து வந்து என்னை சந்தித்தார். ”23 வருஷத்துக்கு முன்னால எனக்கு நீங்க செஞ்ச உதவி ஞாபகமிருக்கா, ரொம்ப அவசியமான நேரத்தில என்ன ஏதுன்னு கேக்காம, எதையும் எதிர்பாக்காம 15000 ரூபாய் கொடுத்து உதவினீங்க. அதை இப்ப திருப்பி கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றார். நான் அதிர்ந்தேன். என் நினைவு கிடங்கில் இல்லாத ஓருதவி நன்றியுடன் திரும்பி வந்தபோது அவரை அதிசயமாய் பார்த்தேன்.

”செஞ்ச நல்லதையே மறந்திட்ட நீங்க எவ்வளவு பெரிய நல்லவர்”எனக் கூறிவிட்டு அமைதி தழும்ப வெளியேறினார். வெளிறிப்போன முகத்தோடு என் மகள் உட்பட டஜன் பேருக்காவது நடந்ததைச் சொல்லி மும்தாஜின் நன்றி குணத்திற்கே ஒரு தாஜ்மஹால் கட்டிக்கொண்டிருக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு பதலளித்துள்ள மும்தாஜ் “நான் பிரபலமாக இல்லாத போது சரியான நேரத்தில் செய்த உதவிக்கு நன்றி. பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் எவ்வளவோ நல்லதாக இருந்தாலும், அதை செய்வதில் தவறிழைத்து, காலப்போக்கில் மறந்துவிட்டேன். நாம் எல்லா நாளையும் இருக்கிறது என்று நினைக்கிறோம் ஆனால் பல நேரங்களில் நாளை வருவதில்லை. எனது நாளை முடிவடையும் முன் கடவுள் எனக்கு இதை நினைவூட்டினார். பார்த்திபன் சார், இந்தத் சினிமாவில் நான் கண்ட மிகச் சில கண்ணியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர், முழுமையான மனிதர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தந்தருள்வானாக” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.