நான்காவது முறையாக வீராணம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள விராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் ஆகும். இந்த ஏரியின் முழுக் கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதிகளில் 44, 856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக ஏரி விளக்கி வருகிறது. ஏரிக்கு மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும்.

கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்ததாலும், ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ததாலும் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிக அளவில் இருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று (டிச.5) மாலை ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி நிரம்பியுள்ளது. வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 1319 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 65 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

விவசாய பாசனத்துக்கு விநாடிக்கு 179 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் மதகு வழியா விநாடிக்கு 1075 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது ஏரிக்கு வரும் 1319 கன அடி தண்ணீர் அப்படியே சென்னை குடிநீர், பாசனம், வடிகால் ஆகியவற்றில் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏரி இந்த ஆண்டு 4 வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிதம்பரம் நீர் வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகர் மற்றும் உதவி பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் ஏரியின் கரைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.