ஆர்ஆர்ஆர் மற்றும் செல்லோ ஷோ (The Last show) ஆகியவை அடுத்தாண்டு நடைபெறும் 95ஆவது ஆஸ்கார் விருது விழாவின் இறுதிச்சுற்றுக்கு செல்ல ஒரு படி மட்டுமே பின்தங்கியுள்ளன. குஜராத்தி மொழி திரைப்படமான செல்லோ ஷோ 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக அனுப்பப்பட்டது. மேலும், ஆவணப்படத் திரைப்படப் பிரிவில் இந்தியாவில் இருந்து இரண்டு படங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆல் தட் ப்ரீத்ஸ் (All that Breathes) மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers).
இதற்கிடையில், எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ (நாட்டு குத்து) பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓர் இந்திய பாடல் முதல் முதலாக இந்த பிரிவின்கீழ் போட்டிக்கு தேர்வாகியுள்ளது பெருமைக்குரியது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.
ஆஸ்கர் விருது வழங்கப்படும் 10 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியலை நேற்றிரவு அறிவித்தது. அகாடமி விருதுகளுக்கான பரிந்துரைகள் ஜனவரி 24 அன்று அறிவிக்கப்படும். அர்ஜென்டினா, 1985, டிசிஷன் டு லீவ், ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட், க்ளோஸ் மற்றும் தி ப்ளூ கஃப்டான் உள்ளிட்ட பிரிவில் உள்ள மற்ற 14 படங்களுடன் இந்தியாவின் செல்லோ ஷோ போட்டியிட உள்ளது.
இதற்கிடையில், உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடப்பட்ட ஆர்ஆர்ஆர், பல்வேறு ஆஸ்கார் பிரிவுகளில் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் கோல்டன் குளோபில், சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்படம் மற்றும் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் ஆகிய இரண்டு விருது பிரிவுகளின்கீழ் போட்டியிடுகிறது.