இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அதி வேகமாகச் சென்ற பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணித்த 42 பேர் உடல் கருகி பலியாகினர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 48 பயணியருடன், குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி, பஸ் ஒன்று நேற்று சென்றது. பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெலா பகுதியில் வளைவு ஒன்றில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ், பாலத்தில் இருந்த துாண் மீது மோதிய பின், பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதையடுத்து அந்த பஸ் தீப்பற்றி எரிந்தது; அதில் இருந்த 42 பயணியர் உடல் கருகி பலியாகினர். பெண் மற்றும் குழந்தை உட்பட மூன்று பேர் இந்த கொடூர விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பாக்., உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மோசமான சாலைகள் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு காரணமாக, பாக்.,கில் சமீபகாலமாக இதுபோன்ற விபத்துகள் அதிகரித்துள்ளன.
படகு கவிழ்ந்து பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தண்டா ஏரியில், மதரசாவில் படிக்கும் மாணவர்கள் 30 பேர், நேற்று சுற்றுலாவுக்காக படகில் சென்றனர். அப்போது ஏரியில் படகு கவிழ்ந்ததில், 17 மாணவர்கள் இறந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இறந்த மாணவர்கள், 7 – 14 வயதுக்கு உட்பட்டவர்கள். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விபத்தில் எரிந்த பஸ்சின் பாகங்களின நடுவே சிக்கியுள்ள உடல்களை மீட்ட மீட்புப் படையினர். இடம்: லாஸ்பெலா, பாகிஸ்தான்.
நிலநடுக்கத்தால் பீதி
பாக்., தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் நேற்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது; இந்த நிலநடுக்கத்தால் ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. பீதியடைந்த பொதுமக்கள் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து ஓடிவந்து சாலைகளில் திரண்டனர். உயிரிழப்பு, பொருட்சேதம் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
