பாலக்காடு: அட்டப்பாடி மது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முனீர் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 16 பேரில் அனிஷ் மற்றும் அப்துல் கரீம் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கு அபராதம்
முதல் குற்றவாளியான ஹுசைனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.1,05,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மீதமுள்ள 12 பேருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.1,18,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு குற்றங்களின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர்,
பிப்ரவரி 22, 2018 அன்று முப்பது வயதான மது என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. மது கொலை வழக்கில் 14 பேரும் தன்னிச்சையான ஆணவக் கொலைக் குற்றவாளிகள் என மன்னார்க்காடு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அட்டப்பாடி மது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
குற்றம் சாட்டப்பட்டவர்களின் 14 பேர்களின் பட்டியல் வரிசைக் கிரமமாக: ஹுசைன், மரைக்கார், ஷம்சுதீன், அனீஷ், ராதாகிருஷ்ணன், அபுபக்கர், சித்திக், உபைத், நஜீப், ஜெய்ஜூமோன், அப்துல் கரீம், சஜீவ், சதீஷ், ஹரீஷ், பிஜு மற்றும் முனீர்.
நான்காவது குற்றவாளி அனிஷ் மற்றும் பதினொன்றாவது குற்றவாளி அப்துல் கரீம் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றத்தின் தன்மை
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டவிரோதமாக கூட்டம் நடத்தியது, பழங்குடியினர் வன்முறை மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன. இந்த வழக்கில் மூன்று முறை தீர்ப்பு ஒத்திப்போடப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுவின் தாய் மற்றும் சகோதரிக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
மது கொலை பின்னணி
பிப்ரவரி 22, 2018 அன்று முப்பது வயதான மது ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டார். திருடன் என்று குற்றம் சாட்டி, மதுவை அந்த கும்பல் பிடித்து அட்டப்பாடியில் உள்ள முகலிக்கு அழைத்துச் சென்று சரமாரியாக அடித்தது. பின்னர் போலீசார் வந்து மதுவை கைது செய்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது அவர் இறந்திருந்தார்.
சமூக ஊடகங்களில் வீடியோ
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதில் ஏற்பட்ட காயங்களால் மதுவின் மரணம் நிகழ்ந்தது என அரசுத் தரப்பு வழக்கு பதிவு செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், மது பிடிக்கப்பட்டு தாக்கப்படும் காட்சிகளை சமூக ஊடகங்களில் பரப்பினர். இந்த வீடியோக்களும் ஆதாரமாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் வழக்கு விசாரணை தொடங்காததால் மதுவின் தாயார் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தை அணுகினார். இரண்டு வழக்கறிஞர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டது ஆனால் அவர்கள் வழக்கை எடுக்கவில்லை. பின்னர் அரசு வழக்கறிஞராக சி.ராஜேந்திரனும், கூடுதல் அரசு வழக்கறிஞராக ராஜேஷ் மேனனும் நியமிக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.