தென்காசி: இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவியை மத்திய அரசு நீக்கிவிட்டு புதிய ஆளுநரை நியமனம் செய்யும் என பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக கடந்த வியாழக்கிழமை இரவு ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளதால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார்.
ஒரு அமைச்சரை நீக்கவோ சேர்க்கவோ முதலமைச்சரால் மட்டும் தான் முடியும். அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்த திமுக தரப்பு, ஆளுநருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. எனினும், அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை பெற ஆளுநர் முடிவு செய்துள்ளதால், ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் பிறகு திமுக ஆக்ஷனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரியில் வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.
இந்த நிகழ்வில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, “ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் உண்டு. தமிழ்நாட்டில் அவர் அமைச்சரை நீக்கி நோட்டீஸ் கொடுக்கிறார். ஆனால் நான்கு மணி நேரத்தில் அந்த நோட்டீஸ் வாபஸ் பெறப்படுகிறது.
ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் அவர் திமுக அரசுக்கு எதிராக வேண்டும் என்றே செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் எந்த ஆளுநர் வந்தாலும் நமது முதலமைச்சரை ஒன்றும் செய்ய முடியாது. திமுக போட்ட வழக்குகள் ஒருபோதும் தோற்றது கிடையாது. இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவியை மத்திய அரசு நீக்கம் செய்யும். புதிய ஆளுநரை மத்திய அரசே நியமனம் செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “திமுக சாதாரணமாக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. அரசியலில் எப்படிப்பட்ட பூகம்பங்கள் ஏற்பட்டாலும், யார் பேசினாலும், எத்தனை மோடிகள் வந்தாலும், எத்தனை அண்ணாமலைகள் சவால் விட்டாலும் அதனையெல்லாம் தவிடு பொடியாக்கும் தொண்டர்கள் திமுகவில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நடக்கும் சம்பவத்தை பார்க்கும்போது, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தைக் கண்டு மோடி பயந்துவிட்டார் என்பது தெரிகிறது. மகாராஷ்டிராவில் கேவலமான விளையாட்டை பாஜக விளையாடி வருகிறது. மோடியின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. கர்நாடகத்தில் பாஜக தோல்வியை தழுவிய போல் மராட்டிய மாநிலத்திலும் 2024 ல் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.” என்றார்.