புதுடில்லி,பெண்கள் தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்கள் இதுவரை பிறப்பித்த உத்தரவுகளில் பயன்படுத்தப்பட்ட ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள், சொற்றொடர்கள் அடங்கிய கையேட்டை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று வெளியிட்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்ற பின், நீதிமன்ற நடவடிக்கைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.
இதன் முதல்படியாக, நீதிமன்ற உத்தரவுகளை ஆங்கிலத்தில் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநில மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, ஆங்கிலத்தில் பிறப்பிக்கப்படும் நீதிமன்ற உத்தரவுகள் ஹிந்தி மட்டுமின்றி, தமிழ், ஒடியா, குஜராத்தி, அசாமி, பஞ்சாபி, நேபாளி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த பட்டியலில், மேலும் பல்வேறு மாநில மொழிகள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளில் பெண்கள் குறித்து குறிப்பிடும் போது ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை நீதிபதிகள் பயன்படுத்துவதை தடுக்க, கையேடு தயாரிக்கும் பணி நடந்து வருவதாக, கடந்த மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
இந்த கையேடு பணிகள் முடிவடைந்து நேற்று வெளியிடப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டு பேசியதாவது:
நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் இதுவரை பிறப்பித்த உத்தரவுகளில், பெண்கள் குறித்து குறிப்பிடும்போது அவர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுஉள்ளன.
இது முற்றிலும் தவறானது. அந்த தீர்ப்புகளை விமர்சிப்பதோ, சந்தேகம் எழுப்புவதோ இந்த கையேட்டின் நோக்கம் அல்ல.
பாலின நிலைப்பாடுகள் எவ்வாறு கவனக்குறைவுடன் கையாளப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டு காட்டுவதே இதன் நோக்கம்.
இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளில் பெண்கள் குறித்து குறிப்பிடும் போது, பயன்படுத்தப்பட்ட ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள், சொற்றொடர்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன.
நீதிபதிகள் இனி தீர்ப்பளிக்கும் போது, அந்த வார்த்தைகளை திரும்ப பயன்படுத்தாமல் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வை இந்த கையேடு ஏற்படுத்தும்.
இந்த கையேடு, உச்ச நீதிமன்ற இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
என்ன வார்த்தைகள் பயன்படுத்தலாம்?
நீதிமன்ற தீர்ப்புகளில் பெண்கள் குறித்து பயன்படுத்தப்பட்டுள்ள ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களை குறிப்பிட்டுள்ளதுடன், அதற்கு பதில் இனி என்ன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையும் இந்த கையேட்டில் அளிக்கப்பட்டுள்ளன.இதன்படி, மயக்குபவள், வேசி, ஒழுக்கம் கெட்டவள் போன்ற வார்த்தைகளுக்கு பதில், பெண் என்று மட்டுமே குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபச்சாரி என்ற வார்த்தைக்கு பதில் பாலியல் தொழிலாளி என்றும், வைப்பாட்டி அல்லது ‘கீப்’ என்ற வார்த்தைகளுக்கு பதில், ஓர் ஆண் காதல் கொண்ட பெண் என்றோ அல்லது திருமணத்துக்கு மீறிய பாலியல் உறவு என்றோ குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.’ஈவ்டீசிங்’ என்பதற்கு பதில், தெரு பாலியல் சீண்டல் என்றும், ‘ஹவுஸ்வைப்’ என்பதற்கு பதில், ‘ஹோம்மேக்கர்’ என்றும் குறிப்பிடும்படி, அந்த 30 பக்க கையேட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்