தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 2018-ல் நடந்ததுபோலவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட ஐந்து மாநிலத் தேர்தலுக்கான பிரசாரங்களும் தொடங்கி வேகமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தின் முக்கிய பா.ஜ.க தலைவர்களில் ஒருவரும், நிஜாமாபாத் எம்.பி-யுமான அரவிந்த் தருமபுரி, நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அரவிந்த் தருமபுரி பேசுகையில், “வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பி.ஆர்.எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், கே.சி.ஆர் காப்பீடு திட்டத்தின் கீழ் 56 வயதுக்குக் குறைவான விவசாயிகள் மரணமடைந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கே.சி.ஆர் இறந்தால் பா.ஜ.க ரூ.5 லட்சமும், கே.சி.ஆரின் மகன் கே.டி.ஆர் இறந்தால் அதை ரூ.10 லட்சமாகவும் உயர்த்துவோம். அவரின் மகள் கவிதா இறந்தால் ரூ.20 லட்சம் தருகிறோம். எப்படியும் கே.சி.ஆரின் காலம் முடிந்துவிட்டது. எனவே, இளைஞர்கள் இறந்தால் தொகையை அதிகப்படுத்தலாம்…” என முகம் சுளிக்கும்படி கூறினார். பா.ஜ.க தலைவரின் இந்தக் கருத்துக்கு, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து, இந்தக் கருத்துக்கு பதிலளித்த கே.சி.ஆர்-ன் மகளும், பி.ஆர்.எஸ் தலைவருமான கவிதா, வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அரவிந்த் தர்மபுரி எங்களுக்கு எதிராகக் கூறிய கருத்து துரதிஷ்டவசமானது, உங்கள் (மக்கள்) மகள்களுக்கு எதிராக அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்திருந்தால், நீங்கள் அமைதியாக இருப்பீர்களா… நான் அரசியலில் இருக்கிறேன். கே.சி.ஆரின் மகன், மகள் என்பதற்காக இப்படிதான் எங்களிடம் பேச வேண்டுமா என்பதை மக்கள் முடிவுசெய்யட்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.