கொரோனாவுக்குப் பிறகு பிரபலமாகிவந்த ஆன்லைன் மீட்டிங்குகளில் பல விதமான கேலிகூத்துகள் ஏற்கெனவே நிறைய இணையத்தில் வைரல் ஆகியிருக்கின்றன. ஆனால், இப்போது வைரல் ஆகியிருக்கும் புகைப்படம் சற்று வித்தியாசமானது.
இதுவரையிலான ஜூம் மீட்டிங்குகளில் ஊழியர்கள்தான் அலப்பறை செய்திருப்பார்கள். ஆனால், இந்த முறை ஒருமுறை நிறுவனத்தின் தலைமை அதிகாரியே சர்ச்சைக்குள்ளாகும் வகையில் ஒரு சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
ஏர் ஏசியா நிறுவனத்தின் இணை நிறுவனர் டோனி ஃபெர்னான்டஸ் அரை நிர்வாணத்துடன் அலுவலக ஜூம் மீட்டிங்கில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஏர் ஏசியா நிறுவனம் என்பது மலேசியாவின் மிகப் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று. இதன் இணை நிறுவனரும், கேப்பிட்டல் ஏ பெர்ஹாட்(Capital A Berhad) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டோனி ஃபெர்னாண்டஸ் சமீபத்தில் தனது லிங்க்ட்இன் (linkedin) பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றினார்.

அக்டோபர் 16-ம் தேதி பதிவேற்றிய அந்தப் புகைப்படத்தில் டோனி பெர்னாண்டஸ் சட்டை எதுவும் அணியாமல் இருக்கையில் உட்கார்ந்தபடி ஆன்லைன் மீட்டிங்கில் யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பணியாளர் ஒருவர் அவருக்கு மசாஜ் செய்து கொண்டிருக்கிறார்.
இந்தப் புகைப்படத்தின் கேப்ஷனில் “இது ஒரு மன அழுத்தம் நிறைந்த வாரம். அதனால் ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்தோனேசியாவின் நிர்வாக அதிகாரி வெரானிட்டி யோசெஃப்பின் என்னை மசாஜ் எடுத்துக்கொள்ள பரிந்துரைத்தார். இந்தோனேசியா மற்றும் ஏர் ஏசியா கலாசாரம் எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் என்னால் மசாஜ் செய்து கொண்டே அலுவலக மீட்டிங்கிலும் கலந்துகொள்ள முடிகிறது” என்று பதிவிட்டிருந்தார் டோனி பெர்னாண்டஸ்.
அவர் என்ன நினைத்து இந்தப் புகைப்படத்தை லிங்க்ட்-இன் தளத்தில் பதிவிட்டாரோ தெரியவில்லை. இதை எல்லோரும் வரவேற்பார்கள் என்று நினைத்து வெளியிட்டாரா அல்லது இப்படிக்கூட மீட்டிங் நடக்கும் என்பதை சொல்ல வந்தாரா என்று தெரியவில்லை.
ஆனால், இந்த போட்டோ பதிவு அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத்தான் கொண்டுவந்திருக்கிறது. பணியாளர்கள் யாராவது ஆன்லைன் மீட்டிங்கில் இப்படி செய்திருந்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்திருக்கும். ஆனால், நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இப்படி செய்தால், அவரை யார்தான் கேட்க முடியும்? என்று தங்கள் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

பலரிடம் இருந்தும் கடும் விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து டோனி ஃபெர்னாண்டஸ் தனது லிங்க்ட்இன் பக்கத்திலிருந்து இந்தப் புகைப்படத்தைவிட்டார். இருப்பினும் நெட்டிசன்களால் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் பரவி வைரல் ஆகிவருகிறது.
சமூக வலைதளம் என்று வரும்போது எல்லோரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது!