நாட்டில் மிகவும் பிரபலமான ஏர்லைன்ஸ் நிறுவனமாக விளங்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த 2020-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக, தன் சேவையை நிறுத்திக்கொண்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நிறுவனத்தை நடத்த போதிய நிதி திரட்ட முடியாத காரணத்தால், இப்போது அந்நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
இதனிடையே, நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வாங்கிய நிதியை கையாடல் செய்ததாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி அமலாக்கபிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவரின் 538 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது. அதோடு அவர் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், `நரேஷ் கோயல் ஏர்வேஸ் நிறுவனத்திற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கிய போது, அவரது மனைவி அனிதா கோயலும் ஏர்வேஸ் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார். அதோடு வெளிநாடுகளில் நரேஷ் கோயல் உருவாக்கிய டிரஸ்ட்களிலும் அனிதா கோயல் டிரஸ்டியாக இருந்தார். வங்கிகளில் கடனாக பெற்ற பணத்தை இந்த டிரஸ்ட்களில் பதுக்கி வைத்துள்ளனர்.
நரேஷ் கோயல் மகன் நிவான் மற்றும் மகள் நம்ரதா ஆகியோர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு தலா ரூ.25 லட்சத்தில் வேலைக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். இரண்டு பேருக்கும் கம்பெனி தரப்பில் ஆடம்பர கார் மற்றும் தனிப்பட்ட செலவுகள் அனைத்தும் செலவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க நிவானுக்கு சம்மன் அனுப்பபட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். நரேஷ் கோயலும் அவரின் மனைவியும் வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை சமீபத்தில் வெளிநாட்டில் இருக்கும் தங்களது மகன் நிவான் பெயரில் எழுதிக்கொடுத்துள்ளனர்.
நிவான் தற்போது வெளிநாட்டில் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறார். அவர் தனக்கான செலவை நரேஷ் கோயல் தனது வெளிநாட்டு வங்கிக்கணக்கில் இருந்து அனுப்பிய பணத்தில்தான் கவனித்துக்கொள்கிறார். நரேஷ் கோயலுடன் சேர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தொடங்கிய ஹஸ்முக்கிற்கும் இந்த குற்றத்தில் பங்கு இருக்கிறது. 1991-ம் ஆண்டு வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள நரேஷ் கோயலுக்கு வெளிநாட்டு வங்கிகளில் நூற்றுக்கணக்கான கணக்குகள் இருக்கின்றன. இந்த வங்கிக்கணக்குகளை ஹஸ்முக்தான் பராமரித்து வருகிறார். அதோடு நரேஷ் தனது வங்கிக் கணக்குகளுக்கு ஹஸ்முக் பயன்படுத்தும் வகையில் அதிகாரமும் கொடுத்து இருக்கிறார். மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நரேஷ் கோயல் தொடங்கி இருக்கும் டிரஸ்ட்களில் ஹஸ்முக்கும் டிரஸ்டியாக இருக்கிறார்.

ஹஸ்முக்கும் வெளிநாடுகளில் பல போலி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார். அவருக்கும் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது. வெளிநாட்டில் நரேஷ் கோயலுக்கும் அவரின் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற விபரத்தை தெரிவிக்கும்படி அமலாக்கப்பிரிவு கேட்டு இருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவும் இல்லை. சம்மனுக்கு பதிலும் அனுப்பவில்லை’ என்று அமலாக்கப்பிரிவு தனது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. நரேஷ் கோயல் மனைவி அனிதா ஏர்வேஸ் நிறுவனத்திற்கு செய்த பணிகளுக்காக ரூ.12.2 கோடி கட்டணமாக பெற்றுள்ளார்.
நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தனக்கு இருக்கும் பங்கை குறைத்துக்கொள்ள மறுத்துவிட்டதாகவும், டாடா உட்பட சில நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பின. ஆனால் நரேஷ் கோயல் தனது பெயரில் இருக்கும் பங்கை குறைத்துக்கொள்ள மறுத்துவிட்டதும் ஜெட் ஏர்வேஸ் நலிவடைய காரணம் என்று அமலாக்கப்பிரிவு தனது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.