Amit Shah : முக்கிய சந்திப்புகளும், அசைன்மென்ட்டுகளும்! – அமித் ஷாவின் மதுரை விசிட் பின்னணி

தமிழகத்தில் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளனர். பாஜக-வும் தனது தேர்தல் பணிகளை அண்மைக்காலமாக வேகப்படுத்தி உள்ளது. மாநில தலைமையில் மாற்றம், அமித் ஷா தமிழகம் வருகை என கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் பரபரப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் ஜுன் 8-ம் தேதி (நாளை) பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறகிறது. இக்கூட்டத்தில் 15,000 நிர்வாகிகள் வரை கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (சனிக்கிழமை) மதுரை வருகை தருகிறார். அமித் ஷா இன்று இரவு 8.30 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று இரவு தங்குகிறார்.

ஜுன் 8-ம் தேதியான நாளை காலை, அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்துக்கு பின்னர் மீண்டும் மதுரையில் இருந்து டெல்லி செல்கிறார் அமித் ஷா. அமித் ஷா வருகையை ஒட்டி மதுரை விமான நிலையம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கூட்டம் நடைபெறும் இடம் ஆகிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெருங்கும் தேர்தல்… முக்கிய அசைன்மென்ட்?

அமித் ஷாவின் இந்த மதுரை விசிட்டில் பாஜக மாநில நிர்வாகிகளை தனியாக சந்தித்து தேர்தலுக்கான வேலைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். கட்சியின் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்தும் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படும் என்கிறார்கள்.

எனினும் இந்த விசிட்டில் அமித் ஷா கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க வாய்ப்பு குறைவு என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக-வுடன் கூட்டணி அமைந்திருக்கும் நிலையில், தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என அப்செட்டில் இருக்கும் ஓ. பன்னீர் செல்வம் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், ஆனால் இன்னும் நேரம் வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பன்னீர் செல்வம்-தினகரன்

மேலும் அமித் ஷாவின் இந்த மதுரை விசிட்டுக்கு முன்பாகவே பாமக-வில் நிலவும் பூசல்களை முடிவுக்கு கொண்டு வந்து, அன்புமணி, ராமதாஸ் என இருவரையும் மதுரை அழைத்து வந்து அமித் ஷாவை சந்திக்க வைக்கும் திட்டமும் பாஜகவிடம் இருந்ததாகவும், அதற்காகவே ஆடிட்டர் குருமூர்த்தி தைலாபுரம் தோட்டம் சென்று ராமதாஸை சந்தித்தார் என்றும் தகவல்கள் வெளியானது.

எனினும் குருமூர்த்தி, `தான் பாஜகவுக்காக வரவில்லை. நட்பின் காரணமாகவே வந்தேன்’ என்றார். இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விழுப்புரத்தில் இருந்து சென்னை புறப்பட்டு மகள் வீட்டுக்குச் சென்றார். மேலும் அமித் ஷா வருவது குறித்து தனக்கு எதிவும் தெரியாது என்றும் கூட்டணி குறித்து பேச இன்னும் நேரம் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

எனினும் அமித் ஷாவின் இந்த மதுரை விசிட்டில் இந்து முன்னணியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது, இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

முருக பக்தர்கள் மாநாடு

மேலும் அந்த கூட்டத்துக்கு 5 லட்சம் வரை மக்களை கூட்ட வேலைகள் நடப்பதால், அந்த கூட்டத்துக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் இந்து முன்னணியின் முக்கிய நிர்வாகிகளிடம் பேச இருக்கிறாராம் அமித் ஷா.

இப்படி அமித் ஷாவின் இந்த தமிழக விசிட்டும் பல்வேறு வகையில் அரசியல் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.