தூத்துக்குடி, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் : பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ தேங்காய் மாலை!

பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால் விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம் ஒன்று உண்டு. அப்படிப்பட்ட அற்புதமான தலம் தூத்துக்குடி, புதுக்கோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறுமுகமங்கலம் ஆறுமுகமங்கலம் ஆயிரத் தெண் விநாயகர் கோயில்.

தலபுராணம்

முன்னொரு காலத்தில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு, ‘கோமார வல்லபன்’ எனும் மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார். பக்தியில் சிறந்த அந்த மன்னன் 1008 அந்தணர்களைக் கொண்டு பிரமாண்ட யாகம் செய்யத் திட்டமிட்டான்.

அந்தணர்கள் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டனர். யாகம் தொடங்கும் வேளையில்தான் அந்தணர்கள் எண்ணிக்கையில் ஒருவர் குறைவது தெரிந்தது. மன்னர் கலங்கினார். திடுமென அந்தணர் ஒருவரை எப்படி அழைத்து வருவது என்று திகைத்தார். தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை மனமுருக வேண்டிக் கொண்டார்.

ஆயிரத்தெண் விநாயகர் கோயில் சிவன்
ஆயிரத்தெண் விநாயகர் கோயில் சிவன்

சற்று நேரத்தில் ஓர் அந்தணர் அங்கு வந்து சேர்ந்தார். யாகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. நிறைவில் அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கை சமர்ப்பித்து ஆசி பெற்றார் மன்னர். 1008-வது நபராக வந்த புதிய அந்தணர் மன்னனிடம் “வந்திருப்பது யாரென்று உனக்குப் புலப்படவில்லையா… என்னை நன்றாகப் பார்’’ என்றார்.

மன்னன் திகைத்துப்போய் பார்க்க அங்கே விநாயகப்பெருமான் காட்சி கொடுத்தார். மன்னன் தொழுது வணங்க விநாயகப்பெருமான் ஆசி வழங்கி, தான் அந்த ஊரிலேயே கோயில் கொண்டு எழுந்தருளத் திருவுளம் கொண்டதாகச் சொல்லி அருளினார். மன்னனும் மகிழ்ந்து விநாயகப்பெருமானுக்கு அற்புதமாக ஆலயம் எழுப்பினார். 1008-வது அந்தணராக பிள்ளையார் வந்ததால், ஆயிரத்தெண் விநாயகர் என்று திருப்பெயர் ஏற்றார் இந்தப் பிள்ளையார்.

நுழைவாயிலைக் கடந்தால் கொடிமரம், மூஷிக வாகனம், மண்டபத்தில் சில படிகள் ஏறினால் கருவறைக்கு வடக்கில், தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்கிறார் பஞ்சமுக விநாயகர். அவரை வணங்கிப் பணிந்து மகா மண்டபத்துக்குள் நுழைந்தால், ஆயிரத்தெண் விநாயகர் தரிசனம்.

ஆதிசங்கரருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது, அவர் திருச்செந்தூர் சென்று சுப்ரமணிய புஜங்கம் பாடி, முருகனருளால் வயிற்றுவலி நீங்கப் பெற்றார் அல்லவா… அதற்கு முன்னதாக அவர் இந்தக் கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வழிபட்டு, கணேச பஞ்சரத்ன கீர்த்தனை பாடி வணங்கினார் என்கிறார்கள். இந்தப் பாடல்களின் ஓலைச்சுவடி, செப்புப்பட்டயத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆயிரத்தெண் விநாயகர்
ஆயிரத்தெண் விநாயகர்

மூலவர் சந்நிதியின் வலப்புறம் நடராஜரும் இடப்புறம் முருகனும் அருள்கிறார்கள். அதேபோல், காள ஹஸ்தீஸ்வரர், கல்யாண சுந்தரி அம்பிகை ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள்.

சித்திரைத் திருவிழாவிழாவின் போது விநாயகருக்குப் பட்டாபிஷேகப் பெருவிழா இங்கே விசேஷமாக நடக்கும். அப்போது ‘கணேச பஞ்ச ரத்ன கீர்த்தனை’ கொண்ட ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம் ஆகியவை வைக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று மட்டும் ஓலைச்சுவடி – செப்புப் பட்டயத்தை பக்தர்களும் தரிசிக்கலாம்.

சித்திரை 7-ம் நாளன்று விநாயகர் உருக்கு சட்ட சேவை, மாலையில் சிவப்பு சாத்தி நடராஜ பெருமானுக்கு எதிர்சேவை காட்சி வைபவம் நிகழும். 8-ம் நாளன்று காலையில் `வெள்ளை சாத்தி’ அலங்காரம், மாலையில் `பச்சை சாத்தி’ அலங்காரத்தில் அருள்வார். 10-ம் நாளன்று திருத்தேர் உலா நடைபெறும்.

இதுவே இத்தனை விசேஷம் என்றால் விநாயகர் சதுர்த்தி பற்றிக் கேட்கவும் வேண்டுமா… `விநாயகர் சதுர்த்தி’ நாளன்று காலையில் கணபதி ஹோமமும் 21 வகையான அபிஷேகமும் விசேச அலங்கார தீபாராதணையும் நடைபெறும். மாலையில் மூஷிக வாகனத்தில் உற்சவர் ஆயிரெத்தெண் விநாயகர் வீதியுலா புறப்பாடும் நடைபெறும்.

ஆயிரத்தெண் விநாயகர்
ஆயிரத்தெண் விநாயகர்

பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ விநாயகர்

பிரதோஷத்தன்று விநாயகருக்கும், மூஷிகருக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்று மூஷிக வாகனத்தில் பிரதோஷநாதராக, ’பிரதோச விநாயகமூர்த்தி’ கிரிவலம் வருவார்.

இத்தலத்தில் விநாயகரை அருகம்புல் அல்லது வெள்ளெருக்கு இலைகளால் அர்ச்சனை செய்துவழிபட வழிபடுவோருக்கு திருமணத்தடை, வழக்கில் இழுபறி, நிலப்பிரச்னை, கணவன் மனைவி பிரச்னை, கடன்பிரச்னை, கல்விமந்தம் என அனைத்து விதமான தடைகளும் விரைவில் நீங்கும் என்கிறார்கள். பிராகாரத்தை 7 முறை சுற்றி வந்து வழிபட்டு இரண்டு தேங்காயை ’பிரார்த்தனைத் தேங்காய்’ எனச் சொல்லி விநாயகரின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். இப்படிப் பக்தர்கள் நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கும் தேங்காய்கள், மறுநாள் கன்னி விநாயகர் சந்நிதியில் கன்னிவிநாயகரைச் சுற்றி அடுக்கி வைக்கப்படுகின்றன.

இவை சங்கடஹரசதுர்த்தி நாளன்று காலையில் நடைபெறும் ’மஹா ஹோம’த்திற்குள் போடப்படுகின்றன. ஹோமத்திற்குள் போடப்படும் தேங்காய்கள் ஒன்றுகூட வெடிப்பதில்லையாம். அப்படியே சாம்பலாகி விடுவதுதான் ஆச்சர்யம் என மெய்சிலிர்க்க சொல்கிறார்கள் பக்தர்கள். இப்படி வேண்டிக்கொண்ட காரியம் 90 நாள்களில் பூர்த்தியாகும் என்கிறார்கள். இப்படிக் கேட்கும் வரங்களை வாரிவழங்கும ஆயிரத் தெண் விநாயகரை ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். வாழ்வில் தடைகள் விலகி வெற்றிகள் கைகூடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.