புதுடெல்லி: “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், பிஹார் மக்களுக்கும் இடையேயான நேரடிப் போட்டி” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் வெற்றி தேவை எனும் நிலையில், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “இது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், பிஹார் மக்களுக்கும் இடையேயான போட்டி. ஆரம்பக்கட்ட முடிவுகளை பொறுத்த அளவில், ஞானேஷ் குமார் பிஹார் மக்களுக்கு எதிராக வெற்றி பெறுவது போல் தெரிகிறது. இப்போராட்டம் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையேயானது அல்ல. இது ஞானேஷ் குமாருக்கும், பிஹார் மக்களுக்கும் இடையேயான நேரடிப் போட்டி.
இவை வெறும் ஆரம்பக்கட்ட முடிவுகள்தான். நாங்கள் சற்று காத்திருக்கிறோம். ஆரம்ப முடிவுகள் பிஹார் மக்களுக்கு எதிராக இருப்பதாகக் காட்டுகிறது. பிஹார் மக்களை நான் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எஸ்ஐஆர் இருந்தபோதிலும் அவர்கள் தைரியமாக வாக்களித்தார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.” என்றார்.
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இது குறித்து, தனது எக்ஸ் தளத்தில், எஸ்ஐஆர் மூலம் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் 65 லட்சம் பேரை நீக்கியபின் என்ன முடிவை எதிர்பார்க்க முடியும்? என கண்டம் தெரிவித்துள்ளார்.