தமிழக அரசியல் வரலாற்றையே உலுக்கும் வகையில், 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். ஒவ்வொரு சுற்றிலும் த.வெ.க வேட்பாளர் சராசரியாக 1,000 வாக்குகள் முன்னிலை பெறுவது தி.மு.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த வி.எஸ்.பாபு?
தற்போது ஸ்டாலினுக்கு சவால் அளிக்கும் வி.எஸ்.பாபு, ஒருகாலத்தில் வட சென்னை தி.மு.க-வின் அசைக்க முடியாத தளபதியாக விளங்கியவர். 2006-ல் புரசைவாக்கம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வென்றவர். 2011-ல் கொளத்தூர் தொகுதி உருவானபோது, அங்கு ஸ்டாலின் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற முக்கியப் பங்காற்றியவர் இவர்தான். இருப்பினும், அந்தத் தேர்தலில் ஸ்டாலின் வெறும் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றதால், பாபு மீது அதிருப்தி ஏற்பட்டு ஓரங்கட்டப்பட்டார்.

இதன்பின் சேகர்பாபுவின் வருகையால் தி.மு.க-வில் இடமிழந்த பாபு, அ.தி.மு.க-வில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத சூழலில், நடிகர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார். இன்று தனது பழைய ‘தலைவருக்கே’ எதிராகக் களம் கண்டு, சொந்தக் கோட்டையிலேயே முதலமைச்சரை பின்னடையச் செய்து ‘ஜெயண்ட் கில்லர்’ அவதாரத்தை எடுத்துள்ளார் வி.எஸ்.பாபு. இந்தத் திருப்பம் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.