மருமகள் கமீலாவுக்கு பதவி: பிரிட்டன் ராணி விருப்பம்| Dinamalar

லண்டன்,-”ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அடுத்த அரசராக சார்லஸ் பதவியேற்கும்போது, அவரது மனைவி கமீலா, ராணியாக இருக்க வேண்டும்,” என, ராணி இரண்டாம் எலிசபெத் விருப்பம் தெரிவித்துள்ளார்.’

குயின் கன்சார்ட்’பிரிட்டன் ராணியாக பொறுப்பேற்று வரும் ஜூனில் 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறார், 95 வயதாகும் ராணி எலிசபெத். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ராணி எலிசபெத் கூறியுள்ளதாவது:இத்தனை ஆண்டுகளாக மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு, ஒத்துழைப்புக்கு நன்றி; இதற்கு நான் கடமைபட்டுள்ளேன்.எனக்குப் பின், என் மகன் சார்லஸ், அரசராக பொறுப்பேற்கும்போதும், இந்த ஆதரவைத் தொடர வேண்டும்.

சார்லஸ் அரசராக பொறுப்பேற்கும்போது, அவரதுமனைவி கமீலாவை ராணியாக ஏற்க வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற முழு தகுதிஉடையவர் அவர்.இவ்வாறு அவர் கூறினார். பிரிட்டன் அரச குடும்ப வழக்கத்தின்படி ராணி ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது, அவரது கணவர்கள், ‘பிரின்ஸ் கன்சார்ட்’ எனப்படும் இளவரசராகவே கருதப்படுவர். ராஜாவாக கருதப்படமாட்டார்கள்.அதே நேரத்தில் அரசர் பொறுப்பை ஏற்கும்போது, அவரது மனைவி ‘குயின் கன்சார்ட்’ எனப்படும் ராணியாகவே கருதப்படுவர்.இளவரசர் சார்லஸ், டயானாவை திருமணம் செய்தார். கடந்த 1996ல் அவர்கள் விவாகரத்து பெற்றனர்.

அதற்கடுத்த ஆண்டு நடந்த விபத்தில் இளவரசி டயானா உயிரிழந்தார். கடந்த 2005ல், சார்லஸ், கமீலாவை திருமணம் செய்தார். கமீலாவுக்கும் இது இரண்டாவது திருமணம்.தற்போது குயின் கன்சார்ட்டாக கமீலா இருக்க வேண்டும் என, ராணி எலிசபெத் தெரிவித்துள்ளதால், இது தொடர்பாக இருந்த குழப்பங்களுக்கு தெளிவான பதில் கிடைத்துள்ளது.சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிபிரிட்டன் மக்களிடையே நீண்ட நாட்களாகவே ஒரு குழப்பம் நிலவியது. கமீலா, சார்லசின் முதல் மனைவி இல்லை. இருவருமே முதல் திருமணத்தை விவாகரத்து செய்து, மறுமணம் செய்தவர்கள். இதனால் சார்லஸ் அரசராக பொறுப்பேற்கும்போது, கமீலாவை, இளவரசி என அழைக்க வேண்டுமா அல்லது ராணி என அழைக்க வேண்டுமா என்ற சந்தேகம் இருந்தது. கமீலாவை ராணியாக பிரிட்டன் மக்கள் அங்கீகரிப்பரா என்ற குழப்பமும் இருந்தது.

பிரின்சஸ் கன்சார்ட் என, அதாவது இளவரசி என அழைக்கப்பட்டால், அவருக்கு அரச குடும்பத்துக்கான மரியாதை கிடைக்கும்; ஆனால் ராணி அந்தஸ்து கிடைக்காது. இந்த குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், தற்போது ராணி எலிசபெத்தே, கமீலாவுக்கு குயின் கன்சார்ட் எனப்படும் ராணிக்கான அந்தஸ்தை வழங்கி விட்டதால், இனி இதற்கு மறு பேச்சு இல்லை. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. பிரிட்டன் மக்களால் கமீலா, ‘ராணி கமீலா’ என, இனி அழைக்கப்படுவார். குயின் கன்சார்ட் என்றால், அரசரின் ஜோடி என, அர்த்தம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.