பொற்காலத்தில் நுழைந்திருக்கிறது இந்தியா 130 கோடி மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: ‘நாட்டின் 130 கோடி மக்களின் திறன் மீது நம்பிக்கை வைத்திருங்கள். அவர்களின் திறமையால் நாடு இப்போது பொற்காலத்திற்குள் நுழைந்திருக்கிறது’ என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்து நேற்று முன்தினம் பேசினார். அப்போது, காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். இங்கும் அவரது பேச்சு, கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு உரையாக அமைந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:காங்கிரஸ் ஒரு வகையில் நகர்ப்புற நக்சல்கள் பிடியில் சிக்கியுள்ளது. காங்கிரசின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் நகர்ப்புற நக்சல்கள்தான் கட்டுப்படுத்துகிறார்கள். அதனால், அதன் சிந்தனை எதிர்மறையாகி விட்டது. ஜனநாயகத்தில் மற்றவர்கள் சொல்வதையும் கேட்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எனவே, இந்திய தேசிய காங்கிரசின் பெயரை ‘காங்கிரஸ் கூட்டமைப்பு’ என மாற்றிக் கொள்ளுங்கள்.காங்கிரசை கலைப்பதற்கு மகாத்மா காந்தி விரும்பினார், ஏனென்றால், எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது அவருக்குத் தெரியும். மகாத்மா காந்தி விரும்பியபடி காங்கிரஸ் இல்லாமல் போயிருந்தால், ஜனநாயகம் என்பது ஒரு குடும்ப வம்சத்திலிருந்து விடுபட்டிருக்கும்; எமர்ஜென்சியின் கறையிலிருந்து நாடு விடுபட்டிருக்கும்; ஊழல் மலிந்திருக்காது; சாதிவெறி மற்றும் பிராந்தியவாதத்தின் படுகுழி இவ்வளவு ஆழமாக இருந்திருக்காது. சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள், காஷ்மீரி இந்துக்கள் தங்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியதில்லை, சாமானியர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். காங்கிரசுக்குள் யாரேனும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கு எதிராகப் பேசினால், அதன் முடிவுகள் அனைவருக்கும் தெரியும். 1975ல் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்தவர்களிடம் இருந்து ஜனநாயகத்தில் பாடம் கற்க மாட்டோம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 50க்கும் மேற்பட்ட மாநில அரசுகளை கலைத்து இருக்கிறது. அனைத்து கட்சிகளும் அவரவர் கட்சியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும். பழமையான கட்சி என்ற வகையில், இந்த விஷயத்தில் காங்கிரசுக்கு அதிக பொறுப்புள்ளது.கொரோனா தொற்று காலத்தில் சர்வதேச அளவில் விலை உயர்வு அதிகரித்த போதிலும், நம்மால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடிந்தது. 40 ஆண்டுகளில் அமெரிக்காவும், 30 ஆண்டுகளில் இங்கிலாந்தும் அதிக பணவீக்கத்தை சந்தித்த நிலையில், விலைவாசி உயர்வை இந்தியா கட்டுப்படுத்தியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். நாட்டை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டின் 130 கோடி மக்களின் திறன் மீது நம்பிக்கை வைத்திருங்கள், அவர்கள் தங்கள் திறமையால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார்கள். தேசம் இப்போது பொற்காலத்திற்குள் நுழைகிறது. இவ்வாறு அவர் பேசினார். அவர் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, மாநிலங்களவை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது. இனி அடுத்த 3 நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 11ம் தேதி பேசுவார்.காங். வெளிநடப்புஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்ட பிறகு தீர்மானத்தை மாநிலங்களவை ஏற்றுக் கொண்டது. பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.