திமுகவின் தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையமும், ஆர்மியாக போலீசும் உள்ளன: சி.வி சண்முகம்

”திமுகவிற்கு தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் திமுகவின் ஆர்மியாக தமிழக காவல்துறை செயல்படுகிறது” என்றும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் தற்போது களைகட்டியுள்ளது. பல இடங்களில் ஆளும் திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம், பெஞ்சமின் ஆகியோர் புகார் மனு அளித்தனர். அதில், தேர்தல் நடைபெறும் இடங்கள் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் பணப்பட்டுவாடா போன்றவற்றை திமுக காவல்துறையின் உதவியுடன் செய்வதாகவும் தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக செயல்படுவதாக புகார் மனு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்கள், ”மாநில தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பு இல்லாமல், ஜனநாயக தன்மையோடு செயல்பட வேண்டும் எனவே சுதந்திரமாக நியாயமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது. திமுகவின் அராஜகதிற்கு துணை போகிறது. திமுகவின் மாநில தேர்தல் பிரிவு செயலாளர் போல மாநில தேர்தல் அதிகாரிகள் செயல்படுகிறார்கள் மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் அங்கமாக செயல்படுகிறது.
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. திமுகவிற்கு ஏற்றார் போல விதிகளை மாற்றி அமைக்கிறார்கள்.இது குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மின்னணு வாக்கு பதிவு முறையில் தேர்தல் நடத்துவதால், சீல் உடைக்கும் போது விடியோ பதிவு செய்ய வேண்டும் என்கிற விதி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 அதிமுக வேட்பாளர்கள் திரும்ப பெற வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஒரு பக்கம் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது. காவல்துறையினர் அதிமுகவினரை மிரட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் குற்றவாளிகள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவினரை மிரட்டுகிறார்.கொலை மிரட்டல் விடுக்க படுகிறது. கடம்பூரில் 3 வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தாமல், அனைத்து வார்டுகளுக்கும் ரத்து செய்துள்ளது தவறானது. திமுகவிற்கு தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக கடம்பூர் டவுன் பஞ்சாயத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்பாளர் ஜானகிராமன்,கொலை மிரட்டல் காரமாக தற்கொலை செய்துள்ளார். ஆள் மாறாட்டம் செய்துள்ளனர். இதுவே தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதற்கு சாட்சி. தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆகியோருக்கு தெரிந்து நடைபேறுகிறதா இல்லை இவர்கள் திமுகவிற்கு உடந்தையாக உள்ளார்களா என்பது தெரியவில்லை.
திமுகவின் ஆர்மியாக தமிழக காவல்துறை செயல்படுகிறது. எங்கள் ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் என பெயர் எடுத்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள், இல்லை துணை போகிறார்கள். இதையெல்லாம் தொகுத்து ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம். ஆட்சிக்கு வந்தால் மட்டும் திமுகவினருக்கு மாநில சுய ஆட்சி பற்றி பேசுவார்கள்.
உதயநிதி பிரச்சாரங்களில் தேர்தல் விதிகள் பின்பற்றப்படுவதே கிடையாது. ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் 2024 தேர்தல் நடைபெறும், அப்போது அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தோம். அந்த சட்டம் கொண்டுவரும் போது அதன் மீதான நிலைப்பாட்டை அதிமுக தெரிவிக்கும்” என்றார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.