ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகள் தலையீடு தேவையற்றது! இந்தியா பதிலடி…

டெல்லி:  கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தான்  உள்பட வெளிநாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது.  எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் உங்களின் தலையீடு தேவையற்றது என கறாராக தெரிவித்துள்ளது.

பள்ளி கல்லூரிகளில் மாணாக்கர்களிடையே சாதி மத வேறுபாடு எழக்கூடாது என்ற வகையில் சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஒரு தரப்பினர் ஏற்க மறுத்தது சர்ச்சையானது. கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு  அரசு கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை  விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மீறி கல்லூரிகள் வர முயற்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து அந்த இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் குதித்த நிலையில், அதை எதிர்த்து இந்து அமைப்புகளைச் சேர்ந்த மாணவி, மாணவிகளும் காவித்துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்துபள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதுடன், இது தொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் குறித்து, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்பட சில நாடுகள் கருத்து தெரிவித்திருந்தன. சுதந்திரத்துக்கான அமெரிக்க அரசின் அமைப்பின் தூதர் ரஷித் ஹுசைன் தனது டிவிட்டரில், “ஒருவர்தான் தேர்வு செய்துள்ள மதத்தினை அல்லது மத நம்பிக்கையினை அனுபவிப்பதற்கு மத அடையாளம் பொருந்திய உடையைத் தேர்ந்தெடுக்கும் முழுமையான உரிமையை பெறுகிறார். அவர்கள் உடை அணியும் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது. பள்ளிகளில் ஹிஜாப் தடை விதிப்பது மத சுதந்திரத்தை மீறுவதாக இருக்கிறது. இதன்மூலம், பெண்கள், சிறுமிகளின் மத ரீதியான வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது. அவர்களை, களங்கப்படுத்தும் விதமாகவும், ஒதுக்கி வைப்பதாகவும் அமைகிறது” என்று பதிவிட்டார்.  இது கடுமையாக விமர்சனங்களை எழுப்பியது. இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட இவர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதேபோல் பாகிஸ்தான் ஆளும் கட்சியான பிடிஐயும் முஸ்கான் ‘அல்லாஹூ அக்பர் ’ என முழக்கமிடும் வீடியோவை பகிர்ந்து , துணிச்சலுக்கு உதாரணம் என என தெரிவித்துள்ளது. மேலும் மோடியின் ஆட்சியில்  இந்தியாவில் அழிவு மட்டுமே  இருப்பதாக  கூறியிருக்கிறது. இதற்கும் இந்திய மக்கள் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து ஹிஜாப் விவகாரம் குறித்து வெளிநாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படாது என தெரிவித்துள்ளது.

ஹிஜாப் விவகாரம் குறித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியும், அது உருவாக்கித் தந்த வழிமுறைகளின்படியும், நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தைப் பின்பற்றியும் விவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும். இந்தியாவை நன்கு அறிந்தவர்கள் அதன் உண்மைத்தன்மையைக் குறைத்து மதிப்பிடாமல் பாராட்ட முன்வருவார்கள்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அந்நிய தலையீடும் தேவையற்றது. சில நோக்கங்களுடன் வெளியிடப்படும் கருத்துக்கள் வரவேற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.