பெரும்பான்மை அடிப்படைவாதமும் சிறுபான்மை அடிப்படைவாதமும் ஒன்றா?

அந்த முஸ்லிம் நண்பர் ஐ.டி.துறை ஒன்றில் வேலை செய்கிறார். அலுவலகத்திற்கு அருகில் வாடகை வீடு தேடுகிறார். தரகர் ஒருவர் மூலம் ஒரு வீடு கிடைக்கிறது. அவர் மூலம் வீட்டு உரிமையாளரிடம் பேசி ஒப்பந்தம் போட்டு பழைய வீட்டிலிருந்து பொருட்களை சிறு லாரியில் ஏற்றி புதிய வீடு வந்து சேர்கிறார். அப்போதுதான் அவரது மனைவி புர்கா அணிந்திருப்பதைக் கண்ட வீட்டு உரிமையாளர் முஸ்லிம்களுக்கு வீடு கிடையாது, இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை, கிளம்புங்கள் என்கிறார். முஸ்லிம் நண்பரோ நியாயமாக வாதிடுகிறார். பழையை வீட்டைக் காலி செய்து விட்டு புதிய வீட்டிற்கு வந்த பிறகு நான் எங்கே செல்ல முடியும் என்கிறார். கவனியுங்கள், வாடகை வீடு எனும் வணிக ஒப்பந்தத்தில் யார் வேண்டுமானாலும் வீடுகளை வாடகைக்கு எடுக்கலாம்.

ஒப்பந்தப்படி முன்பணம், வாடகை, வீட்டிற்கு சேதமேற்படுத்தக் கூடாது, காலி செய்வதற்கு முன்பு மூன்று மாதங்கள் முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என்பவைதான் பொதுவான விதிகள். ஆனால் முஸ்லிம் நண்பரோ இங்கே சட்டம் பேசவில்லை. அல்லது போலீசிடமும் போகவில்லை. வாதிட்டு தோல்வியுற்று லாரியுடன் திரும்பிவிட்டார். அவர் எனக்கும் நண்பர்தான். குடும்ப நண்பர். இதைப் போகிற போக்கில் ஒரு நாள் சொன்னார். பெரியார் மண் என்றழைக்கப்படும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே நிலை இதுதான். இவரை விடுங்கள் கவிஞரும் திமுக பிரபலமுமான மனுஷ்யபுத்திரனுக்கே ஒரு முஸ்லிம் என்பதால் வீடு மறுக்கப்பட்டதை அவர் விரிவாக எழுதியிருக்கிறார்.

மறைமுகமான பாகுபாடுகள்

மறுபுறம் பிராமணர்களுக்கு மட்டுமே வாடகை வீடு அல்லது மறைமுகமாக சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே வீடு என்ற விளம்பரப் பலகைகள் சென்னை முழுவதும் இன்றுவரை தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. பத்திரிகைகளின் வரி விளம்பரங்களிலும் இன்றுவரை வந்துகொண்டுதான் இருக்கின்றன.

தமிழ்நாட்டிலேயே இதுதான் நிலை என்றால் இந்தி பேசும் மாநிலங்களில் நிலைமை படுமோசம். வங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் (பிராமணர்) குஜராத்தில் பணியாற்றும்போது வாடகை வீட்டில் அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான செயல் போலப் பின்பற்றப்படுவதை ஒரு முறை அனுபவப் பதிவாக எழுதியிருக்கிறார். அவர் அசைவ உணவுப் பிரியர் என்பதால் அருகமை தொழிலாளிகளிடம் விசாரித்துவிட்டு அகமதாபாத்தின் ஒதுக்குப்புறமாக இருக்கும் அசைவ உணவகங்களைத் தேடிப்பிடித்து உணவு உட்கொண்டதை ஒரு சாகசப் பயணமாகக் கூறுகிறார்.

இதுதான் இந்தியா. இந்தியாவை மதச்சார்பின்மை நாடு என்று வேறு அழைக்கிறார்கள்.

என்னுடைய முஸ்லிம் நண்பர் அரசியல் ஆர்வம் கொண்டவரோ அது குறித்த விவாதங்களை அதிகம் செய்பவரோ அல்ல. தானுண்டு தன் வேலையுண்டு, தன் குடும்பமுண்டு என்று இருப்பவர். எங்களுடன் இயல்பாகப் பழகுவார். நாங்கள் அவர்களது வீட்டிற்குச் செல்லும்போது அவரது மனைவி புர்காவோ, ஹிஜாப்போ அணிவதில்லை. தெருவில் பொருட்கள் வாங்கும்போதுகூட அவர் அணிவதில்லை. வீட்டை விட்டு வெளியே போகும்போது மட்டும்தான் அணிவார். இப்போது அவர்கள் முஸ்லிம் உரிமையாளர் ஒருவரது வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள். அந்தக் குடியிருப்பில் மற்றவர்கள் அனைவரும் இந்துக்கள்.

முஸ்லிம் என்பதற்காக வீடு மறுக்கப்படுகிறது. அலுவலக வேலைகளிலும் மறுக்கப்படுகிறது. அவர்களது மத அடையாளங்களைப் பின்பற்றுவதால் இப்போது கர்நாடகாவில் கல்வியிலேயே மறுக்கப்படுகிறது. இவை ஒரு சராசரி முஸ்லிமின் மனதில் என்ன விளைவை ஏற்படுத்தும்?

இவையே இப்படி என்றால் இந்து அடிப்படைவாதிகள் நடத்திய கலவரம் என்றால்? 2002 குஜராத் முஸ்லிம் மக்கள் மீதான இனப்படுகொலை கலவரமாக இருக்கட்டும், அதற்கு முன்பு நடந்த கலவரங்களாக இருக்கட்டும்; அனைத்தும் என்ன விளைவை ஏற்படுத்தின?

பல வட இந்திய நகரங்களில் முஸ்லிம்கள் தமது வாழ்வாதாரங்கள், வணிகத்தை இழந்தார்கள். தனது குடும்ப உறுப்பினர்களை பலிகொடுத்தார்கள். அதற்கான வழக்குகளில் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. ஓரிரு விதிவிலக்குகளைத் தவிரக் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து இந்துத்துவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்கள்.

பயங்கரவாதத்தின் வேர் எது?
(PTI Photo)

இந்த நாட்டின் ஜனநாயகமும், நீதித்துறையும் தனக்கு வாழும் உரிமையை அளிக்கவில்லை என்ற நிலைமையில்தான் முஸ்லிம் தீவிரவாதம் தோன்றுகிறது. அப்படிப் பாதையில் பிறழ்ந்த ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள் குண்டு வைக்கிறார்கள். தமது வாழ்க்கை தொலைந்தாலும் இந்த அநீதிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற பழியுணர்வே அவர்களை வழிநடத்தியது. அது வெறும் மத உணர்வு மட்டுமல்ல. 90களிலும், 2000ங்களிலும் நடந்த குண்டுவெடிப்புகள் இப்போது இல்லை. ஆனாலும் முன்னிலும் அதிகமாக பாஜகவின் ஆட்சியில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது, பறிக்கப்படுகிறது. அவர்கள் அவற்றை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறார்கள். வேறு ஏதும் செய்ய இயலாத அடிமை நிலை.

முஸ்லிம் தீவிரவாதிகள் குண்டு வைத்ததைப் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, கண்டித்தார்கள். ஆனால் அவை எடுபடுமளவு இந்த நாட்டின் ஜனநாயகம் அவர்களுக்கு உறுதுணையாக இல்லை. ஆனாலும் இன்று அத்தகைய தீவிரப்பாதைக்கு எந்த முஸ்லிம் இளைஞர்களும் செல்வதில்லை. மாறாக அந்த குண்டு வெடிப்புகளுக்கும் சரி, குண்டு வைப்பதற்கான சதி என்ற பெயரிலும் சரி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் சிறைகளில் பல ஆண்டுகள் அடைக்கப்பட்டார்கள். சிலர் பல ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது பறிக்கப்பட்ட வாழ்க்கையை யாராலும் திருப்பி வழங்க முடியாது.

தலைவர்களும் மத அடையாளங்களும்

இந்தியாவின் பிரதமரோ, ஒரு மாநிலத்தின் முதலமைச்சரோ இந்துக்களின் பிரதிநிதி இல்லை. அவர்கள் தனிப்பட்ட முறையில் பின்பற்றும் மத நம்பிக்கைகள் அவர்களது வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி நாமம் போட்டு ராமானுஜர் சிலையைத் திறந்துவைக்கிறார். ஆதித்யநாத் முழுநேரமும் சாமியார் உடையில் வலம் வருகிறார். கேரளாவில் ஒரு முதலமைச்சர் கிறஸ்துவப் பாதிரியாராக அங்கி போட்டு வலம் வந்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா? இதுதான் இந்தியா.

(AP Photo/Valentina Petrova)

இந்தியா தன்னை மதச்சார்பற்ற சோசலிஷக் குடியரசு என்று அரசியல் சாசனத்தில் அறிவித்துக்கொண்டாலும் இங்கே மதச்சார்பின்மையும் இல்லை, சோஷலிசமும் இல்லை. இதுவரை இந்தியாவின் முப்படைகளிலும் சிபிஐ, ரா போன்ற அமைப்புகளிலும் ஒரு முஸ்லிம்கூடத் தலைமைப் பதவிக்கு வந்தது இல்லை. முஸ்லிம் என்றால் பாகிஸ்தான் ஆதரவாளர் என்று கருதும் இந்துத்துவ மனம் ஏதோ ஒருவகையில் மெல்லிய அளவிலாவது பெரும்பான்மை இந்துக்களிடம் இருக்கவே செய்கிறது.

இன்று முஸ்லிம் அடிப்படைவாதம், அதிலும் தீவிரவாதம், கடும் அடக்குமுறைகளால் முறியடிக்கப்பட்டுவிட்டது. சில அசட்டு முல்லாக்கள் கருத்தளவில் வகாபியிசம் பேசினாலும் அது முஸ்லிம்கள் தம்மை வருத்திக்கொள்வதான ஒரு கருத்தாக மட்டுமே இருக்கிறது. செயலில் அது இன்னொரு மதப்பிரிவை ஒடுக்கும் அளவுக்கு இல்லை. அது சாத்தியமும் இல்லை. ஏனெனில் இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் மட்டுமே.

யாருக்குப் பொறுப்பு அதிகம்?

அரசுப் பொறுப்புகளில் இருப்பவர்கள்தான் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். சாதாரண மக்கள் தத்தமது மதசார்பைக் கடைப்பிடிக்கலாம். அதைத்தான் அரசியல் சாசனம் மத உரிமையாக அறிவித்திருக்கிறது.

ஒரு சீக்கியர் டர்பன் கட்டுவதோ, கத்தி வைத்திருப்பதோ அடிப்படை உரிமை. சீருடையிலும் கட்டுப்பாட்டிலும் கறாராக இருக்கும் இராணுவத்திலேயே அதுதான் நிலைமை. தமிழகத்தில்கூட சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் போலீஸ்காரர்கள் தாடி வளர்த்தும், ஷூ போடாமலும் இருப்பார்கள். இவையெல்லாம் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. பள்ளிகளில் பொட்டு வைப்பதும், விபூதி பூசுவதும், கொலுசு போட்டுக்கொள்வதும்கூட இங்கே அனுமதிக்கப்படுவதுண்டு. சாதிக்கேற்ற வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிக்கொள்கிறார்கள். அது போக திருஷ்டிக் கயிறு வேறு. இவையெல்லாம் சீருடையில் எந்த பாதகமும் ஏற்படுத்துவதில்லை என்று ஒரு இந்து மனம் இயல்பாக சிந்திக்கிறது. ஆனால் ஒரு முஸ்லிம் பெண் புர்காவோ, ஹிஜாப்போ அணிந்தால் அதை மத அடிப்படைவாதம் என்று பார்க்கிறது. ஒரு பிரச்சினையை யதார்த்தமாக பார்க்காமல் தமது முற்போக்கு வேதங்களின் விதிப் புத்தகங்களைப் புனிதமாக கருதும் ஒரு சில முற்போக்காளர்களும் அப்படியே கருதுகிறார்கள்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்களின் அடையாளங்களை ஒவ்வொன்றாய் அழிக்கிறது. அதைப் பொது நலன் என்ற பெயரில் திணிக்கிறது. நோக்கம் இந்த நாட்டின் பொதுவாழ்க்கையில் முஸ்லிம்கள் ‘பாரதீயப் பண்பாட்டை’ மட்டும் பின்பற்ற வேண்டும் என்பதுதான். இதை ஆர்.எஸ்.எஸ்.இன் இரண்டாவது தலைவர் எம்.எஸ்.கோல்வல்கர் அப்பட்டமாக அறிவித்திருக்கிறார்.

ஆடு கோழி பலி தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். அது நாட்டார் தெய்வங்களை வழிபடும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களை உயர்சாதி பிராமணிய பண்பாட்டிற்கு மாற்றும் முயற்சி. எனவே நாத்திகம் பேசும் முற்போக்கு அமைப்புகள் அந்த சட்டத்தை மறுத்து ஆட்டை வெட்டி ஊர்வலம் போயின. பிறகு ஜெயலலிதா அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றார். தில்லை சிதம்பரம் கோவில் சிற்றம்பல மேடையில் தமிழ் கூடாது, தேவாரம் திருவாசகத்தைப் பாட முடியாது என்று சிவனடியார் ஆறுமுகசாமி அடித்து விரப்பட்டார். அதை ஒரு உரிமைப் போராட்டமாக நடத்திய இடதுசாரி அமைப்புகள் இறுதியில் அந்த உரிமையைப் பெற்றுத் தந்தன. பக்தர்கள் யாரும் பாடுவதற்கு வரத் தயராக இல்லாத போது இடதுசாரித் தோழர்களே விபூதி பூசிக் கொண்டு சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடினார்கள். ஆனால் அவர்கள் நாத்திகர்கள்.

சாதியோ, மதமோ பாகுபாடுகளைப் பின்பற்றும்போது அதை எதிர்ப்பதற்காக முற்போக்காளர்கள் எடுக்கும் இந்த நடவடிக்கைதான் மிகச் சரியானது. இது அவர்களது கொள்கைக்கு எதிரானது அல்ல. ஏனெனில் மதத்திலோ, சாதியிலோ சமத்துவம் வரும்போது அது வர்க்க சமத்துவத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு துவக்கமாக இருக்கும்.

(PTI Photo)

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று இத்தனை வருடம் இல்லாத ஒரு பிரச்சினையை இந்துத்துவ அமைப்புகள் கிளப்பிவருகின்றன. ஒருவேளை அவர்கள் அரசாங்கம், நீதித்துறை உதவியுடன் அதை வென்றும் காட்டலாம். மோடியின் ஆட்சியில் அனைத்து அமைப்புகளும் தமது ஜனநாயக வண்ணத்தை இழந்து வருகின்றன. இந்நிலையில் அனைவரும் அடையாளமாக ஹிஜாப் அணிவதும், ஏன் அல்லா ஹூ அக்பர் என்று முழங்குவதும் கூட இக்காலத்தில் புரட்சிகரமான நடவடிக்கைகள்தான். விசிக தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் ஜெய் பீம் என்பதோடு அல்லா ஹூ அக்பர் என்றும் முழங்கினார். அது நிச்சயம் பாராட்டிற்குரியது.

எனவே இன்றைய காலகட்டத்தில் முஸ்கான் கான் எனும் அந்த மாணவிதான் நமது பாரத மாதா. அவர் கோரும் ஹிஜாப் உரிமை நமது உரிமையும்கூட. சொந்த நாட்டில் சிறுபான்மை மக்களை ஒடுக்கும் இந்துத்துவம் பெரும்பான்மை இந்துக்களையும் ஒடுக்கியே தீரும். அது சாதி, மொழி, இன உரிமை, மாநிலங்கள் உரிமை என்று பல அவதாரங்களில் வரும். வேளாங்கண்ணிக்கும், நாகூர் தர்காவிற்கும், சமயபுரம் மாரியம்மனுக்கும் அனைத்து மத மக்கள் சென்று வழிபடும் நாடுதானே இது. அதை ஒழிப்பதே இந்துத்துவத்தின் நோக்கம்.

சச்சார் கமிட்டி கூறியதுபோல இந்நாட்டின் முஸ்லிம்கள் தொடர்ந்து கல்வியிலும் வளர்ச்சியிலும் பின்தங்கியே இருப்பதற்குக் காரணம் அவர்கள் பெரும்பான்மை மதவாதத்தின் பெயரால் ஒடுக்கப்படுவதுதான். அதை வீழ்த்தாமல் இங்கே முஸ்லிம்கள் ஒரு சாதாரண வாழ்க்கையைக்கூட வாழ முடியாது. ஹிஜாப் அணியவில்லை என்றாலும் இங்கே ஒரு முஸ்லிம் மாணவிக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் என்பதற்காவே உரிமைகள் மறுக்கப்படும். இதைப் பற்றிப் பலர் சமூக ஊடகங்களில் எழுதியிருக்கிறார்கள்.

ஹிஜாப் அணிவது சரியா தவறா என்னும் விவாதத்தை நம் நாட்டில் இந்துத்துவம் வீழ்த்தப்பட்டு உண்மையான ஜனநாயகம் தழைக்கும்போது வைத்துக்கொள்வோம். இப்போது சிறுபான்மை மக்களின் வாழும் உரிமையையும் மத உரிமையையும் காப்பதே நம் கடமை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.