மதத்தை அவமதித்ததாக ஒருவரை அடித்து கொன்ற கும்பல்- 80 பேர் கைது

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் கடந்த டிசம்பர் மாதம் மதத்தை அவமதித்ததாக இலங்கையை சேர்ந்த ஆலை மேலாளர் பிரியந்தகுமாரா என்பவரை கும்பலாக சேர்ந்து அடித்து கொன்றனர். பின்னர் அவரது உடலை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இது போன்ற சம்பவம் மீண்டும் பாகிஸ்தானில் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் கானேவால் மாவட்டத்தில் மதத்தை அவமதித்ததாக கூறி ஒருவரை பலர் கும்பலாக சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.
தடிகள், இரும்பு கம்பி, கோடாரி ஆகியவற்றால் கிராம மக்கள் அந்த நபரை கடுமையாக தாக்கி கொன்றனர். பின்னர் அவரது உடலை ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடலை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, ‘கொல்லப்பட்ட நபர் கடந்த 15 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட நபர் கும்பலால் இழுத்து செல்லப்படுவதற்கு முன்பு போலீசார் கட்டுப்பாட்டில் இருந்தார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து பிரதமர் இம்ரான்கான் கூறும்போது, ‘இந்த வழக்கு சட்டரீதியாக கடுமையாக கையாளப்படும். சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வோருக்கு எதிராக தனது அரசு துளியும் சகிப்புத்தன்மையை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் கொல்லப்பட்டவரின் உயிரை பாதுகாக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் தொடர்பாக அறிக்கையை இம்ரான்கான் கேட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.