கவர்னர் தமிழிசையிடம் மலேஷியா பெண் எம்.எல்.ஏ., புகார்| Dinamalar

புதுச்சேரி: மலேஷிய பெண் எம்.எல்.ஏ.,வின் முகநுால் பக்கத்திற்கு, ஆபாச பதிவு அனுப்பிய புதுச்சேரி நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கவர்னர் தமிழிசையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலேஷியா நாட்டின் பகாங் மாநிலம், சபாய் சட்டசபை எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜ். மலேசியவாழ் தமிழரான இவருக்கு, ஐந்து நாட்களுக்கு முன், புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் ஒருவர் முகநுால் மூலம் அறிமுகமாகி உள்ளார்.அவரது அறிமுகத்தை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., அவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். பதிலுக்கு அந்த நபரும் வரவேற்று, பதிவு செய்தார்.
அதன் பிறகு பணி நிமித்தம் காரணமாக தனது முகநுால் பக்கத்தை, தமிழச்சி காமாட்சி துரைராஜ் பார்க்காமல் இருந்துள்ளார்.ஆனால், தொடர்ந்து அந்த நபர், முகநூல் பக்கத்தில் எம்.எல்.ஏ.,வுக்கு ஆபாச பதிவுகளை அனுப்பி வந்துள்ளார். அத்துடன், முகநுால் ‘மெசஞ்சர்’ மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.இதை கவனித்த எம்.எல்.ஏ.,வின் உதவியாளர், இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

latest tamil news

கட்சி நிர்வாகிகள், ஆபாச பதிவுகளை அனுப்பிய நபரை, முகநுால் மூலமாக தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த நபர் தனது முகநுால் பக்கத்தை ‘பிளாக்’ செய்துள்ளார்.மேலும், ‘தமிழச்சி காமாட்சி துரைராஜ் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து ‘இன்ஸ்டாகிராமில்’ பகிர்வேன்’ என, மிரட்டி உள்ளார்.அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ., தமிழச்சி காமாட்சி துரைராஜ், மர்ம நபர் பதிவிட்ட முகநுால் பதிவுகளுடன், ஆடியோ பதிவு மூலம், புதுச்சேரி கவர்னர் தமிழிசைக்கு, புகார் அனுப்பியுள்ளார்.
ஆடியோ பதிவில் பெண் எம்.எல்.ஏ., கூறியிருப்பதாவது:மலேஷிய நாட்டில் எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். தங்களுக்கு அனுப்பியுள்ள பதிவுகளை, எனக்கு தொடர்ந்து முகநுால் பக்கத்தில் ஒருவர் அனுப்பி வருகிறார். இந்த பதிவுகளை பார்க்கும் போது, அந்த நபர் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிகிறது.
இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள நண்பர்கள் சிலரிடம் நான் பேசியபோது, உங்களுடைய தொடர்பு எண்களை கொடுத்தனர். காரணம், அந்த மர்ம நபர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவரது பதிவுகளை பார்க்கும் போது பா.ஜ.,வை சேர்ந்தவர் போல தெரிகிறது. இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என, எதிர்பார்க்கிறேன்.
மலேஷியாவில் எம்.எல்.ஏ.,வாக உள்ள தமிழ் பெண்ணான எனக்கே இதுபோன்ற நிலை என்றால், அவரது ஊரில் என்ன செய்வார் என்பதை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.உங்களைப் போன்ற, என்னை போன்ற பெண்கள், இதுபோன்ற இடங்களில் கால்பதிக்க முடிகிறது என்றால், அதற்கு நாம் கடந்து வந்துள்ள இன்னல்கள் எளிமையாக இருக்காது என்பது உங்களுக்கு தெரியும். இதை கருத்தில் கொண்டு, அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.