5 ஆண்டு தீவிர காதல்- காதலர் தினத்தில் தம்பதியான திருநங்கைகள்

திருவனந்தபுரம்:

திருச்சூர் சாலக்குடியை சேர்ந்தவர் மனு கார்த்திகா. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சியாமா. இருவரும் திருநங்கைகள் ஆவர். மனு கார்த்திகா திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுதுறையில் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சியாமா கேரள சமூக நலத்துறையில் திருநங்கையருக்கான பிரிவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீவிரமாக காதலித்து வந்தனர். ஆனால் நிலையான வேலை, அதற்கேற்ற வருமானம் கிடைத்த பின்னரே திருமணம் செய்து கொள்வது என்று ஏற்கனவே அவர்கள் தீர்மானித்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இருவருக்கும் நல்ல வேலை கிடைத்ததோடு நிரந்தர வருமானமும் வரத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருநங்கையர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதற்கு தகுந்த நாளை அவர்கள் தேடியபோது காதலர் தினம்தான் அதற்கு சரியான நாள் என்று முடிவு செய்தனர். இதை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி திருவனந்தபுரம் இடப்பழஞ்சி அழகாபுரி திருமண மண்டபத்தில் காதலர் தினத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது மனு கார்த்திகா ஆணாகவும், சியாமா பெண்ணாகவும் ஆடை அணிந்திருந்தனர். இவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை புரோகிதர்கள் நடத்தி வைத்தனர். இதில் உற்றார், உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருமணத்தில் அடையாள ஆவணங்கள் படி இருவரும் திருநங்கையர் என பதிவு செய்து கொண்டனர். திருநங்கையர் என பதிவு செய்த தம்பதிகளின் முதல் திருமணம் இது என்று சியாமாவும், மனுவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

இதற்கு முன்பும் திருநங்கைகளின் திருமணங்கள் நடைபெற்று இருக்கிறது. ஆனால் ஆவணங்களின் படி ஒருவர் ஆணும், மற்றொருவர் பெண்ணுமாக இருப்பார்கள். அல்லது இரண்டில் ஒருவர் மட்டும் திருநங்கையாக இருப்பார்கள். திருநங்கையராக அங்கீகரிக்கப்பட்டவர்கள் செய்யும் முதல் திருமணம் எங்களின் திருமணம் தான்.

சட்டப்படி எங்களது திருமணத்தை பதிவு செய்ய முடியாது. எனவே இது தொடர்பாக அரசு மற்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.