அர்ஜூன் மாமனார் கன்னட நடிகர் ராஜேஷ் மரணம்

பெங்களூரு: கன்னடத்தில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர், ராஜேஷ் (89). இவர், கடந்த சில மாதங்களாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் ரவீந்திர கலாஷேத்ராவில் பொதுமக்கள்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் மாநில அமைச்சர்கள், திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பிறகு நேற்று மாலை ஹெப்பாளில் உள்ள மின்மயானத்தில் ராஜேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது. இவர், நடிகர் அர்ஜூன் மாமனார். இவருடைய மகளும், நடிகையுமான ஆஷா ராணியை அர்ஜூன் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நாடகங்களில் நடித்தபோது, மாநில அரசின் பொதுப்பணித்துறையில் டைப்பிஸ்ட்டாக பணியாற்றினார் ராஜேஷ். 1960ல் வீர சங்கல்பா படத்தை இயக்கிய கிருஷ்ணமூர்த்தி மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிறகு ராமாஞ்சநேயா யுத்தம், கங்கே கவுரி ஆகிய படங்களில் நடித்தார். 1968ல் ஊரு என்ற படம் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோது, வித்யாசாகர் என்ற தனது பெயரை ராஜேஷ் என்று மாற்றிக்கொண்டார். அப்படமும், பெயர் மாற்றமும் திரையுலகில் அவரை ஒரு முன்னணி நடிகராக உயர்த்தியது. 50 ஆண்டு களுக்கும் மேலாக கன்னட திரையுலகில் கோலோச்சிய ராஜேஷ், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.