தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது – தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது: ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி

‘தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது. அதனால், என்னை தமிழன் என உணர்ந்தேன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார். மூவாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனது வரலாற்று நூலின் முதல் பாகத்தை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு திமுக பொருளாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகித்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலைவகித்தார். கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி அனைவரையும் வரவேற்று பேசினார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

ஒரு அருமையான புத்தகத்தை எழுதிய எனது மூத்த அண்ணன் ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் நீண்ட நெடிய போராட்டங்களை எதிர்கொண்டு, பல ஆண்டுகள் போராடி, தமிழக மக்களுக்கு ஏராளமான நன்மைகளை பெற்றுத் தந்துள்ளார்.

தமிழகம் வந்தாலே எனக்கு ஒருவித மகிழ்ச்சியை தருகிறது. நான் மக்களவையில் ஆற்றிய உரையில் தமிழகத்தின் சிறப்புகள் குறித்து பேசினேன். அந்த உரையை தமிழக மக்கள் அனைவரும் பாராட்டியதை அறிவேன். அந்த உரையில் என்னை அறியாமல் நான் தமிழன் என்றேன். கூட்டம் முடிந்து வெளியில் வந்தபோது, உங்களை ஏன் தமிழன் என்றீர்கள் என பத்திரிகையாளர்கள் கேட்டனர். நான் காரில் ஏறியபோது, நான் தமிழகத்தில் பிறக்கவில்லை. தமிழில் பேசவில்லை. தமிழின் 3 ஆயிரம் ஆண்டு தொன்மையை அறியவும் முற்படவில்லை. பின்னர் ஏன் நான் தமிழன் என்று பேசினேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். பின்னர், எனது ரத்தம் இந்த தமிழ் மண்ணில் கலந்திருக்கிறது. அதனால் நான் தமிழன் என்பதை உணர்ந்தேன்.

மண்ணில் இருந்து மக்களும், மக்களிடம் இருந்து குரலும், குரலில்இருந்து மொழியும், மொழியில் இருந்து கலாச்சாரமும், காலச்சாரத்தில் இருந்து வரலாறும், வரலாற்றில் இருந்து மாநிலங்களும், மாநிலங்களில் இருந்து இந்தியாவும் உருவாகின்றன. எனவே, இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம்தான்.

மூவாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழகத்தின் மீது எதையும், யாராலும் இதுவரை திணிக்க முடிந்ததில்லை. தமிழகத்தின் பாரம்பரியத்தையும், சொல்லையும், மொழியையும் புரிந்துகொள்ளாமல் எந்த அடிப்படையில் அவர் (பிரதமர் மோடி) தமிழகத்தை பற்றி பேசுகிறார்? மக்களின் மொழியை புரிந்துகொள்ள முடியாமல் எப்படி தமிழர்களுக்காக பேச முடிகிறது? தமிழக மக்கள் திரும்பத் திரும்ப நீட் பற்றி கேட்கிறார்கள். அதற்கு இதுவரை பதில் அளிக்காததுதான், தமிழக மக்களுக்கு அளிக்கும் மரியாதையா?

ஜிஎஸ்டி விதிப்பது நியாயமில்லை. அதனால் பாதகம் ஏற்படுகிறது எனகூறும் தமிழக மக்களை புரிந்துகொள்ளாமல் மத்திய அரசு அவமதிக்கிறது. மத்திய பாஜக ஆட்சியில், சுதந்திர நாட்டில் முதன்முறையாக மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜம்முவை அங்கு வாழும் மக்களால் ஆள முடியவில்லை. குஜராத், உத்தரபிரதேச மாநிலத்தினரே ஆள்கின்றனர்.

இந்தியா வரலாற்று ரீதியாக பல்வேறு மொழி, கலாச்சாரத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் பலமேஇதுதான். இதை சிதைக்க முற்படுகின்றனர். அதேபோன்று இந்தியாவின் நீதித்துறை, தேர்தல் ஆணையம், பத்திரிகை துறை ஆகியவை திட்டமிட்டு ஒன்றன்பின் ஒன்றாக நசுக்கப்படுகின்றன. இந்தியா எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க இவர்கள் யார்? அதை மக்கள்தானே தீர்மானிக்க வேண்டும். இப்போது இதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது.

நமது மக்களாட்சி முறையில் மக்களின் குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் (பாஜக)வரலாற்றை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின்பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் எதிர்த்தால் அவர்கள் தோற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக நூலாசிரியரான முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை வழங்கினர்.

தமிழக அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.