அதிமுக கவுன்சிலர்கள் பதவியேற்பில் பாரபட்சமா?!பிரிக்கப்பட்ட மேடை மீண்டும் அமைக்கப்பட்டது ஏன்?!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் இருக்கின்றன. இவற்றுக்குக் கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில், ராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க 11 இடங்களையும், அ.தி.மு.க 6 இடங்களையும், காங்கிரஸ் 1 இடத்தையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றினர்.

அலங்காரம் கலைக்கப்படும் மேடை

இந்த நிலையில், ராமேஸ்வரம் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு இன்று நகராட்சி அலுவலக வளாகத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை பத்து முப்பது மணி முதல் தி.மு.க கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணி அளவில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் K.K.அர்ச்சுணன், பிரபாகரன் மற்றும் மலையம்மாள் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்ய நகராட்சி அலுவலகம் வந்தனர். ஆனால், காலையில் நடைபெற்ற விழா மேடையில் அலங்காரங்கள் கலைக்கப்பட்டுக் கிடந்தது. அதைக் கண்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஆணையரிடம் கேட்டபோது அவர்களுக்குத் தனி அறையில் நடத்துவதாகக் கூறியுள்ளார்.

மீண்டும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அதிமுக கவுன்சிலர்கள்

அதனால், அ.தி.மு.க கவுன்சிலர்கள் மிகுந்த ஆவேசமடைந்து நகராட்சி ஆணையரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “நாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தானே! எங்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்வதற்கு ஏன் பாரபட்சம்…” என ஆவேச குரல் எழுப்பினர். இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், மீண்டும் பந்தல் போட்டு அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.