தஞ்சை மேயர்: முதல்வர் குடும்பத்துடன் நெருக்கம்… டிக்'கான சண்.ராமநாதன்! – பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாநகராட்சி தி.மு.க மேயர் வேட்பாளராக சண்.இராம நாதன், துணை மேயர் வேட்பாளராக டாக்டர் அஞ்சுகம் பூபதி அறிவிக்கப்பட்டுள்ளனர். மேயர் வேட்பாளர் சீட்டை பிடித்துவிட வேண்டும் என பலர் போட்டியிட்டாலும், ரேஸில் இந்த இருவர் தான் முன்னிலை வகித்தனர். கோடிகளில் செலவு செய்ய சிலர் தயாராக இருந்தும், உயதநிதி சண்.இராமநாதன் பெயரை டிக் செய்ததுடன் அவர்தான் வேட்பாளர் என்பதிலும் உறுதியாக இருந்து அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சண்.இராமநாதன்

தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் சீட்டை பிடிக்க தி.மு.க-வுக்குள் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான சண்.இராமநாதன், மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரான டாக்டர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் மாவட்ட பொருளாளரும் தொழில் அதிபருமான மேத்தா, மாநகர துணை செயலாளர் நீலகண்டன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இவர்கள் இல்லாமல் பண பலம் படைத்த சிலர், `எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்கிறேன்… கட்சி தலைமைக்கும் பணம் தருகிறேன்’ என மேயர் சீட் கேட்டு தலைமையிடம் காய்நகர்த்தியிருக்கின்றனர்.

இந்த நிலையில், மேயர் வேட்பாளராக சண்.இராமநாதன், துணை மேயர் வேட்பாளராக டாக்டர் அஞ்சுகப் பூபதி அறிவிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து சிலரிடம் பேசினோம். “சண்.இராமநாதன் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். ஸ்டாலின் தொடங்கி உதயநிதி வரை சண்’னை பெயர்ச் சொல்லி அழைக்கும் அளவிற்கு அறிமுகமானவர். ஆனால், அதை எந்த இடத்திலும் காட்டிக் கொள்ள மாட்டார் .கோஷ்டி அரசியலுக்குள் சிக்காமல் இருந்ததே இவரது பெரிய பலமாக சொல்லப் படுகிறது. ஏற்கெனவே இரண்டு முறை கவுன்சிலராக இருந்தவர், தற்போது மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மேயர் சீட் பெற்றிருக்கிறார்.

டாக்டர் அஞ்சுகம் பூபதி

கடந்த 13 வருடங்களாக பாலாஜி நகர் பகுதியில் மக்கள் சந்திக்கக் கூடியப் பகுதியில் தினமும் காலை இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஒதுக்கி மக்களோடு மக்களாக இருந்து பழகி, அவர்கள் சொல்கிற குறைகளை சரி செய்து கொடுத்து வருவதால் அந்தப் பகுதியில் இவருக்கென தனி அடையாளம் உள்ளது. கவுன்சிலராக இருந்த வார்டில், தான் கொடுத்த வாக்குறுதிகளை நலதிட்டங்களாக நிறைவேற்றி கொடுத்ததால் அவர் மீது மக்களுக்கு நன்மதிப்பும், நட்பும் தொடர்ந்தது.

அதேபோல, இளைஞரணியைச் சேர்ந்த ஒருவர்தான் தஞ்சாவூரின் மேயராக வரவேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருந்தார். டாக்டர் அஞ்சுகம் பூபதி, தன் தந்தை பூபதி காலத்திலிருந்தே கருணாநிதி தொடங்கி ஸ்டாலின் வரை தங்கள் குடும்ப நட்பை தொடர்ந்து வருகின்றனர். ஸ்டாலின் அக்கா செல்விக்கு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருவதால் அடிக்கடி பேசி கொள்ளும் அளவிற்கு நெருக்கமாகவே இருந்துள்ளார்.

தஞ்சாவூர்
மாநகராட்சி

மாநகராட்சி மேயருக்கான பொறுத்தமான நபர், தஞ்சை நகர் குறித்து நல்ல புரிதல்களை கொண்டிருப்பவர் என்பதால் மாநகராட்சியை திறம்பட நடத்துவார் என்ற காரணத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் தஞ்சாவூர் மத்திய மாவட்ட பொறுப்பாளரான துரை.சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சண்.இராமநாதனை மேயர் வேட்பாளராக டிக் செய்ததால் ரேஸில் முந்தியதுடன் மேயர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருப்பதால் மறைமுக தேர்தலில் வெற்றி பெற்று சண்.இராமநாதன் மேயராக பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.