உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

புதுடெல்லி:
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. 2024ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
403 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாடி கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி உள்ளது. இந்த மாநிலத்தில் மேட்ரைஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 262 முதல் 277 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பெற 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 
சமாஜ்வாடி கட்சி கூட்டணி 2ம் இடத்தை பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அந்த கூட்டணிக்கு 119 முதல் 134 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 3 முதல் 8 தொகுதிகள் வரையிலும், பகுஜன் சமாஜ் கட்சி 7 முதல் 15 தொகுதிகளிலும், மற்றவை 2 முதல் 6 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதேபோல்  பி-மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கும் என தெரியவந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி கூட்டணிக்கு 140 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களும், காங்கிரசுக்கு 4 இடங்களும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஆனால், கருத்துக் கணிப்பு முடிவுகள் முக்கியமில்லை, நாங்கள் 300 இடங்களுக்கு மேல் பெறுவோம் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.