கோகுல்ராஜ் ஆணவக்கொலை: தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…

சேலம்: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை  செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு என்ன தண்டனை என்பது குறித்து நீதிபதி இன்று அறிவித்துஉள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி கடந்த 5ந்தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.  முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும், இந்த வழக்கில் தொடர்புடைய  அருண், குமார், சங்கர், அருள் வசந்தம், செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகியோரும் குற்றவாளிகள் என்றும், செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி மார்ச் 5ந்தேதி  நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதைத்தொடர்ந்து 8ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிபதி கூறினார்.

முதல் குற்றவாளியான யுவராஜூக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று முற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.  நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்ட 10 பேரும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என வாதாடினார். ஆனால்,  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு வழக்கறிஞரும் வாதாடினார். அப்போது,  கோகுல்ராஜ் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தற்கொலை போல ஜோடிக்கப்பட்டு கொடுமையாக நடைபெற்றுள்ளது இந்த சம்பவம் சமூகத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது; குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும்  என வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் பிற்பகலில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விவரம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இந்த பரபரப்பான சூழலில் யுவராஜ் உள்பட குற்றம்சாட்டப்பட்டு குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்பது குறித்து நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். முதலாவ தாக முதல் குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோகுல்ராஜ் கொலை பின்னணி:

சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், 2015 ஆம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். சாதிய வெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது.  ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் நட்பாக பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று (கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி) இருவரும் ஒரு இடத்தில் தனியா சந்தித்து பேசியுள்ளனர். அதை கண்ட யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள், கோகுல்ராஜை கடத்திச் சென்றுள்ளனர். இதற்கிடையில்,  கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.

அப்போது, நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப் பட்டது.  அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

இதுதொடர்பாக  சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் இந்த ஆணவ படுகொலையை விசாரித்து வந்த  திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணையும் நடைபெற்றது. அரசு வக்கீலாக சேலத்தைச் சேர்ந்த கருணாநிதியும் யுவராஜ் தரப்பின் வக்கீலாக மதுரை ஜி.கே. என்ற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தனர்.

இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்ன.. அதில் முக்கியமான சாட்சியான கோகுல்ராஜின் கொலை காரணமாக, அவரது பெண் தோழி அவ்வப்போது மாறுபட்ட தகவல்களை தெரிவித்து நீதிமன்றத்தையும், வழக்கறிஞர்களையும் குழப்பி, பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின.

இதற்கிடையில், அரசு தரப்பு வழக்கறிஞராக, சீனியர் வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம், சந்தியூர் வக்கீல் பார்த்திபன் மூலமாக மனு கொடுத்தார். அந்த மனு கிடப்பில் போடப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சித்ரா. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணாநிதியை விடுவித்து விட்டு, அரசு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தரவிட்டது. இதை தமிழக உள்துறைச் செயலாளரும் அரசாணை மூலம் உறுதிப்படுத்தினார்.

இந்த உத்தரவு வந்த போது நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. கடந்த 2019 மே 5ஆம் தேதி முதல் இந்த வழக்கு, மதுரை எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். பலர் பிறழ் சாட்சிகளாக மாறினாலும் இந்த வழக்கில் சிசிடிவி முக்கிய சாட்சியமாக இருந்தது.

வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த 5 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.